குழந்தை திருமணம் செய்தால் கடும் தண்டனை… உதவி செய்தாலும் கண்டிப்பாக சிறை .. ஆட்சியர் வார்னிங்..!!

Author: Babu Lakshmanan
10 May 2022, 8:49 pm

கன்னியாகுமரி : குழந்தை திருமணம் செய்து வைத்தாலோ, உதவி புரிந்தாலோ கடும் சிறைதண்டனை விதிக்கப்படும் என்று குமரி ஆட்சியர் எச்சிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது; கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு மாதங்களில் 5 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. குழந்தை திருமண தடுப்புச்சட்டம் – 2006 இன் படி 18 வயது நிறைவடையாத பெண்ணுக்கும் 21 வயதும் நிறைவடையாத ஆணுக்கும் செய்யப்படும் திருமணங்கள் செல்லாது. சட்டப்படி குற்றம் .

இச்சட்டத்தினபடி குழந்தை திருமணம் செய்யும் மணமகன் குழந்தை திருமணத்தை முன்னின்று நடத்துபவர்கள் அல்லது வழிகாட்டுபவர்கள், அர்ச்சகர், பெண்குழந்தைக்கு பொறுப்பாக உள்ள பெற்றோர் அல்லது பாதுகாவலர், குழந்தை திருமணத்தில் கலந்து கொள்ளும் அனைவரும், அனுமதி அளித்தவர்கள், பங்கேற்றவர்கள் மற்றும் தடுக்க தவறியவர்கள் அனைவரும் குற்றவாளி ஆவார்கள்.

குற்றம் புரிந்தவருக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அல்லது ரூபாய் 1 லட்சம் அபதாரம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.குழந்தை திருமணம் பற்றிய அறிந்தால் 1098 (அல்லது ) 181 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் எந்த இடத்தில் இருந்தும் குழந்தை திருமணம் குறித்து தகவல் தெரிவிக்கலாம்.

தகவல் அளித்தவரின் விபரங்கள் அனைத்தும் பாதுகாக்கப்படும். காவல்துறை, கிராம நிர்வாக அதிகாரி, கல்வித்துறை ஆகியோருடனும் ஒருங்கிணைந்து செயல்பட்டு குழந்தையை மீட்டு மனமாற்றத்திற்கு தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும்.

குழந்தை திருமணம் புரியும் பெண்களுக்கு கர்ப்பப்பை முழுவளர்ச்சி அடையாததால் அடிக்கடி கருச்சிதைவும், குழந்தை எடை குறைவாகவும், ஊட்டச்சத்து குறைபாடுடைய குழந்தை பிறக்க நேரிடுகிறது. இதனால் தாயும் சேயும் பிரசவத்தின்போது அல்லது பின்னர் மரணம் ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது.

குடும்பத்தை சரிவர பராமாரிக்க இயலாதநிலை, கல்வியறிவுத் தடை, தன்னம்பிக்கை குறைதல், தற்கொலை எண்ணம், இளம் வயதிலேயே விதவையாதல், குடும்பத்தினரால் புறம்தள்ளப்படும் நிலை மற்றும் ஆதரவற்று துன்புறும் நிலைமை ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே இத்திருமணங்களை தடுக்கும் முயற்சி நம் ஒவ்வொருவருக்கும் உள்ள தலையாய கடைமையாகும். குழந்தை திருமண தடுப்புச்சட்டம் – 2006 உள்ள விதிகள்படி மாவட்ட சமூகநல அலுவலர் குழந்தை திருமண தடுப்பு அலுவலராக உள்ளார்.

மேலும் விபரங்களுக்கு மாவட்ட சமூகநல அலுவலர் / குழந்தை திருமண தடுப்பு அலுவலர், மாவட்ட ஆட்சியரகம், இணைப்பு கட்டடம் கீழ்தளம், நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம் தொலைபேசி எண்-04652-278404 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் . இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

  • Ajith reunite Again With Adhik அஜித்துடன் மீண்டும் கூட்டணி… உருவாகும் மார்க் ஆண்டனி 2.. ஆதிக் முடிவு!!
  • Views: - 1717

    0

    0