கெட்டுப்போன உணவை சாப்பிட்டு சிறுவர்கள் உயிரிழந்த விவகாரம் : காப்பகத்தை மூடிய அதிகாரிகள்… துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan8 October 2022, 3:50 pm
திருப்பூர் திருமுருகன்பூண்டி பகுதியில் 3 சிறுவர்கள் உயிரிழப்புக்கு காரணமான ஸ்ரீ விவேகானந்தா சேவாலய காப்பகம் வருவாய்த்துறை முன்னிலையில் இன்று மூடப்பட்டது.
திருப்பூர் திருமுருகன் பூண்டி பகுதியில் உள்ள ஸ்ரீ விவேகானந்தா சேவாலயத்தில் 15 சிறுவர்கள் தங்கி அருகில் உள்ள அம்மாபாளையம் அரசு பள்ளியில் கல்வி பயின்று வந்த நிலையில் கடந்த 5ஆம் தேதி இரவு ரசம் சாதம் சாப்பிட்டு உடல் உபாதைக்குள்ளாகினர்.
6ஆம் தேதி காலை ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்த போது இரண்டு மாணவர்கள் உயிரிழந்தும் , மீதமுள்ள 12 மாணவர்கள் மற்றும் ஒரு காவலர் மயக்கம் அடைந்த நிலையில் இருந்துள்ளனர்.
உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர்கள் மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில் மேலும் ஒரு மாணவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். மீதமுள்ள 11 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றைய தினம் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், தமிழக அரசால் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரியான மணிவாசகம் தலைமையிலான குழுவினர் மற்றும் சமூக நலத்துறை இயக்குனர் வளர்மதி தலைமையிலான குழுவினர் நேரில் காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் காப்பகத்தில் சிறுவர்கள் தங்குவதற்கான பாதுகாப்பு வசதிகள் எதுவும் இல்லை எனவும் காப்பக நிர்வாகத்தின் அஜாக்கிரதை மற்றும் மெத்தனபோக்கு காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பதால் காப்பகம் மூடப்படுவதாக அறிவித்தார்.
இதனை அடுத்து இன்று காலை திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் மூத்த ஐஏஎஸ் அதிகாரி மணிவாசகம் உள்ளிட்டார் காப்பகத்தில் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருவாய் துறையினருக்கு காப்பகத்தை மூட உத்தரவிட்டனர்.
இதனை தொடர்ந்து வட்டாட்சியர் ராஜேஷ் மற்றும் காவல்துறையினர் முன்னிலையில் காப்பகத்திற்கு பூட்டு போட்டு மூடப்பட்டது. மேலும் உயிரிழந்த மூன்று மாணவர்களின் உடல்கள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து திருப்பூர் மின்மயானத்தில் எரியூட்டப்பட்டது. திருமுருகன்பூண்டியில் பூட்டு போட்டு மூடப்பட்ட காப்பகத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
0
0