பிடி மாடுப்பா.. பிடி மாடு… களிமண் பொம்மைகளை வைத்து அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு… வர்ணனையுடன் அசத்திய சிறுவர்கள்.. வைரல் வீடியோ!!
Author: Babu Lakshmanan4 January 2023, 9:49 am
பொங்கல் பண்டிகை என்றாலே அனைவருக்கும் உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிதான் சட்டென நினைக்கு வரும். வீரத்தை வெளிப்படுத்தும் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு போட்டியான ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மாவட்டத்தில் உலகப்புகழ்பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு 15ம் தேதியும், பாலமேடு ஜல்லிக்கட்டு 16ஆம் தேதியும், அலங்காநல்லூரில் 17ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
இதற்கான முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமடைந்துள்ள நிலையில், மாடுபிடி வீரர்களும் , ஜல்லிக்கட்டு காளைகளும் போட்டிகளில் கலந்துகொள்வதற்கான பயிற்சிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
ஜல்லிக்கட்டு போட்டியை காண்பதற்கும், அதில் கலந்துகொள்வதற்கும், இளைஞர்கள் ஆர்வமுடன் ஜல்லிக்கட்டு போட்டியை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலையில், சிறுவர்களும் ஜல்லிக்கட்டு போட்டியை எதிர்நோக்கியுள்ளனர். இதனை எடுத்துரைக்கும் வகையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே குறவன்குளம் கிராமத்தை சேர்ந்த பள்ளி சிறுவர்கள் 10க்கும் மேற்பட்டோர் களிமண்ணால் செய்யப்பட்ட காளைகளை பயன்படுத்தி மினி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியுள்ளனர்.
அதில் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு களம் போல தேங்காய் நாரை பரப்பி இரு பக்கமும் கம்புகளால் தடுப்புகளை அமைத்தும், களிமண்ணால் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வாடிவாசலை போன்று அமைத்து, அதில் களிமண்ணால் செய்யப்பட்ட ஏராளமான ஜல்லிக்கட்டு காளைகளை வாடிவாசலில் வெளிவருவது போல ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திகாட்டினர்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு வர்ணனை போல வர்ணனை பேசியபடி போட்டியை கைகளால் நடத்திகாட்டிய சிறுவர்கள், பிறவாடி போன்று காளைகளை வரிசையாக நிறுத்திவைத்து வாடிவாசலில் வெளியேற்றுவது போலவும், காளைகளை வீரர்கள் அடக்குவது போலவும், பரிசு அறிவிப்புகளோடு தத்ரூபமாக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தினர்.
உலகப்புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி போல சிறுவர்களால் களிமண்ணால் உருவாக்கப்பட்ட காளைகள், வாடிவாசலை பயன்படுத்தி மினி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்திய வீடியோ காட்சிகள் பார்ப்போரை வியக்கவைத்துள்ளது.
மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு தயாராகிவரும் நிலையில், சிறுவர்கள் நடத்திய களிமண் ஜல்லிக்கட்டு போட்டி மதுரை மக்களின் மனதில் ஜல்லிக்கட்டு போட்டி வாழ்வியலாக மாறியுள்ளதை காட்டும் வகையில் அமைந்துள்ளது.