உயிருக்கு போராடிய சிறுவர்கள்.. உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞருக்கு நேர்ந்த பரிதாபம் : திருமண நாளில் சோகம்!

Author: Udayachandran RadhaKrishnan
30 May 2023, 9:16 pm

மதுரை மாவட்டம் ராஜாக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (37). இவருக்கு ஒரு மகளும், மகனும் உள்ளனர். இந்நிலையில் இன்று தனது திருமண நாளைக் கொண்டாடிய முத்துக்குமார் இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு சென்றுள்ளார்.

அப்பொழுது கருப்பாயூரணி கண்மாய் பகுதியில் சில சிறுவர்கள் குளித்துக் கொண்டிருந்தனர். அதில் சில சிறுவர்கள் நீரில் சிக்கிக் கொண்டு நீச்சல் தெரியாமல் தத்தளித்துக் கொண்டிருந்தனர்.

இதைக் கண்ட முத்துக்குமார் காப்பாற்றும் நோக்கில் உடனடியாக கண்மாய்க்குள் குதித்து நான்கு சிறுவர்களையும் உயிரை பணயம் வைத்துக் காப்பாற்றினார். நான்கு பேரையும் காப்பாற்றிய பிறகு கரைக்கு திரும்ப முயன்றபோது எதிர்பாராத விதமாக சேற்றில் மாட்டிக் கொண்ட முத்துக்குமார் இறந்து போனார்.

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கருப்பாயூரணி போலீசார் மற்றும் மீட்புப் படையினர் முத்துக்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

முத்துக்குமார் உயிரிழந்ததை அறிந்த அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. திருமண நாள் அன்றே சிறுவர்களைக் காப்பாற்ற முயன்று இளைஞர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

  • first day collection of Ajith's Good Bad Ugly Movie தல சுற்ற வைக்கும் GBU முதல் நாள் வசூல் வேட்டை… எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா?