ஸ்டாலின் படத்தை செருப்பால் அடித்த பாஜகவினர்.. நிலைகுலைந்த போலீசார்.. பொள்ளாச்சியில் பரபரப்பு!
Author: Hariharasudhan11 March 2025, 5:01 pm
கோவை, பொள்ளாச்சியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் உருவப் படத்தை எரித்த திமுகவினரைக் கண்டித்து பாஜகவினர் நடத்திய போராட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
கோயம்புத்தூர்: தமிழக மக்களவை உறுப்பினர்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதானைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, கோவை மாவட்டம் பொள்ளாச்சியிலும் திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இவ்வாறு திமுக சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தில், எருமை மாட்டுக்கு மத்திய அமைச்சரின் புகைப்படத்தை அணிவித்து அழைத்து வந்தனர். தொடர்ந்து, மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திரா பிரதான் உருவப் படத்தை செருப்பால் அடித்தும், உருவ பொம்மையை எரித்தும் போராட்டம் நடத்தினர்.
இந்த நிலையில், திமுகவினரின் இச்செயலைக் கண்டித்து பொள்ளாச்சியில் இன்று காந்தி சிலை அருகே, பாஜக கோவை தெற்கு மாவட்டத் தலைவர் சந்திரசேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆனால், போராட்டத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறிய போலீசார், அவர்களைக் கைது செய்ய முயன்றனர்.
இதனால் இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், காவல் ஆய்வாளர் ஒருவர் நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். அப்போது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உருவப் படத்தினை பாஜகவினர் செருப்பால் அடித்தும், திமுகவைக் கண்டித்து கோஷங்களையும் எழுப்பினர்.
இதையும் படிங்க: வெடிகுண்டு வீசி பிரபல ரவுடி வெட்டிக்கொலை.. காஞ்சிபுரத்தில் பரபரப்பு சம்பவம்!
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த கருமத்தம்பட்டி டிஎஸ்பி தங்கராமன் தலைமையிலான போலீசார், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கோவை தெற்கு மாவட்ட பாஜக முன்னாள் தலைவர் வசந்த ராஜன் உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினரைக் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.