‘என் மகள விட எப்படி நீ அதிக மார்க் வாங்கலாம்’… 8ம் வகுப்பு மாணவனை விஷம் கொடுத்து கொன்ற சக மாணவியின் தாய் கைது..!!

Author: Babu Lakshmanan
4 September 2022, 12:37 pm

புதுச்சேரி ; படிப்பில் ஏற்பட்ட போட்டியின் காரணமாக மாணவனுக்கு அதே பள்ளியில் பயிலும் சக மாணவியின் தாய் விஷம் கலந்த குளிர்பானத்தை கொடுத்து கொலை செய்த சம்பவம் காரைக்காலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் அடுத்த நேரு நகர் ஹவுசிங் போர்டு குடியிருப்பு பகுதியில் வசிக்கும் ராஜேந்திரன்-மாலதி தம்பதியரின் மகன் பாலமணிகண்டன். 14 வயதான பாலமணிகண்டன் நேரு நகரில் உள்ள ஒரு தனியார் ஆங்கிலப் பள்ளியில் 08ம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளியில் ஆண்டு விழா நடைபெற இருப்பதால் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளுக்கு ஒத்திகை நேற்று காலை நடைபெற்றுள்ளது.

த்திகையில் கலந்து கொள்ள பள்ளிக்கு வந்த பாலமணிகண்டன் ஒத்திகை நிகழ்ச்சி முடிந்து வீடு திரும்பிய உடன் களைப்பில் இருந்த நிலையில் வாந்தி எடுத்துள்ளான். தொடர்ந்து வாந்தி எடுத்ததால் பதட்டமடைந்த பால மணிகண்டனின் பெற்றோர் காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக பால மணிகண்டனை சேர்த்துள்ளனர்.

அப்போது சிறுவனிடம் பள்ளியில் என்ன சாப்பிட்டாய் என கேட்டதற்கு பள்ளி வாட்ச் மேன் தேவதாஸ் என்பவர் கொடுத்த குளிர்பானத்தை குடித்ததாக கூறியுள்ளான். இரு பாட்டில்கள் கொடுத்ததில் ஒன்றை குடித்து விட்டு மற்றொன்றை தனது பையில் உள்ளதாக கூறியுள்ளான்.

இதனை தொடர்ந்து பாலமணிகண்டனின் தாய் மாலதி நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார், பள்ளி வாட்ச்மேன் தேவதாசிடம் மேற்கொண்ட விசாரணையில் அதே பள்ளியில் பாலமணிகண்டன் உடன் பயிலும் மாணவி அருள்மேரியின் தாய் சகாயராணி விக்டோரியா என்பவர் பள்ளிக்கு வந்து பாலமணிகண்டனின் தாய் கொடுத்ததாக கூறி அந்த குளிர்பானத்தை கொடுத்து சிறுவனிடம் கொடுக்க சொன்னதால் கொடுத்ததாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக போலீசார் சகாயராணி விக்டோரியாவிடம் கேட்டதற்கு, தான் கொடுக்கவில்லை என மறுத்துள்ளார். இதனையடுத்து தனியார் பள்ளியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆராய்ந்ததில் பால மணிகண்டன் உடன் வகுப்பில் பயிலும் அருள்மேரியின் அம்மா சகாயராணி விக்டோரியா வாட்ச்மேன் தேவதாஸ் என்பவரிடம் வெள்ளை நிற பையில் இரண்டு கூல்ட்ரிங்ஸ் பாட்டிலை கொடுத்த செல்வது தெரிய வந்தது.

இதையடுத்து, சகாயராணி விக்டோரியாவை கைது செய்த போலீசார், சகாயராணியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவன் பேசிய காணொலியில் தன்னுடன் பயிலும் அருள்மேரி தான் அதிக மதிப்பெண் எடுக்கும் போதெல்லாம் திட்டுவதாக தெரிவித்துள்ளான்.

இச்சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரித்ததில் பால மணிகண்டனுக்கும், மாணவி அருள் மேரிக்கும் வகுப்பில் முதல் மதிப்பெண் எடுப்பதில் போட்டியிருந்த நிலையில், தனது மகளை விட அதிக மதிப்பெண் எடுக்கும் பாலமணிகண்டனை கொல்ல திட்டமிட்டு உறவினர் என்ற போர்வையில் நஞ்சு கலந்த பொருளை குளிர்பானத்தில் கலந்து கொடுத்து கொலை செய்ய முயற்சித்துள்ளதாக கூறி, சிறுவன் பால மணிகண்டனின் தந்தை ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதனிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் சிறுமியின் தாயார் கைது செய்யப்பட்டார். இன்று மாலை உயிரிழந்த மாணவனின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

மேலும், சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காரைக்கால் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

  • tamannaah dialogue in odela 2 trailer trolled by netizens பூமாதா, கோமாதா… படத்தில் பேசிய வசனத்தால் ட்ரோலுக்குள்ளாகும் தமன்னா…