பழனி முருகனை தரிசித்து விபூதி பூசி மாநாட்டில் CM பங்கேற்க வேண்டும்.. இல்லையென்றால் வரக்கூடாது : ஹெச் ராஜா!!

Author: Udayachandran RadhaKrishnan
9 August 2024, 2:21 pm

திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே நெய்க்காரப்பட்டியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

பொது கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரும் தேசிய செயற்குழு உறுப்பினருமான ஹெச். ராஜா கலந்து கொண்டார்.

முன்னதாக அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது : நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு இஸ்லாமிய அமைப்புகளே வரவேற்பளித்துள்ளது என்றும், ஒரு தனிநபரின் சொத்துக்களை வக்பு வாரியம் தன்னுடையது என்று அறிவித்துக் கொண்டால் அதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு கூட செல்ல முடியாத நிலை தற்பொழுது உள்ளது.

மேலும் வக்பு வாரியத்தில் இருந்து தடையில்லா சான்று பெற்றாலே பொதுமக்கள் தங்களுடைய சொத்துக்களை விற்க முடியும் என்ற நிலை உள்ளது. இது கொலை செய்தவனிடமே நியாயம் கேட்பது போன்றது. எனவே புதிய வக்புவாரிய திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், வக்புவாரியத்திற்கு சொந்தமான சொத்துக்கள் குறித்த விவகாரங்களில், ஆதாரங்கள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே முடிவு எடுக்கலாம் என்றும், பெண்களுக்கும் வக்பு வாரியத்தில் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது.

இந்த சட்ட திருத்த மசோதா சட்டமாக நிறைவேற்றப்படும் பொழுது பாதிக்கப்பட்டுள்ள ஏராளமான பொதுமக்கள் பயனடைவார்கள் என்றும் தெரிவித்தார்.

இஸ்ரேல்- ஹமாஸ் தொடர்பான பிரச்சனையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக பேசிய காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் திமுக ஆகிய கட்சிகள் பங்களாதேஷில் நடைபெறும் கலவரத்தில், அங்கு சிறுபான்மையினராக வாழும் ஹிந்துக்கள் மீதும், அவர்களது வணிக நிறுவனங்கள், வீடுகள், கோவில்கள் மீது நடத்தப்படும் கொடூர தாக்குதல்கள் குறித்து ஏன் கருத்தோ, கண்டனமோ தெரிவிக்கவில்லை.

இதன்மூலம் அவர்கள் மக்களும் விரோதி என்றும், பங்களாதேஷில் நடப்பது போன்று இந்தியாவிலும் நடக்கும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்திருப்பது கண்டனத்திற்குரியது என்றும்,
இந்தியாவில் பிரதமர் இல்லம் தாக்கப்படும் என்றும், வங்காளதேசம் போலவே இந்துக்களும் தாக்கப்படுவார்கள் என கூறுகிறாரா என்றும் கேள்வி எழுப்பினார்.

எனவே இந்துக்களை வாக்கு அரசியலுக்காக மட்டுமே இந்த கட்சிகள் பயன்படுத்திக் கொள்வதாகவும், எனவே மத நல்லிணக்கத்தை விரும்பும் அனைவரும் இந்த கட்சிகளை அடியோடு ஒழிக்க பாடுபட வேண்டும் என்றும் கூறினார்.

பழனியில் வருகிற 24, 25ம் தேதிகளில் நடைபெற உள்ள அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு வரவேற்கத்தக்கது என்றும், ஆனால் சமீபகாலமாக தொடர்ந்து முருகனை இழிவாக பேசி இந்து மதத்திற்கும் பிளவுகளை ஏற்படுத்தும் திமுகவின் ஜால்ராவாக உள்ள சுகிசிவம் அவர்களை முன்னிறுத்தி ஏன் இந்த மாநாடு நடத்தப்படுகிறது என்றும், இந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொள்ள வருவதாக இருந்தால், முதலில் அவர் பழனி மலைக்கோவிலுக்கு சென்று முருகனை தரிசனம் செய்துவிட்டு நெற்றியில் விபூதியை பூசிக்கொண்ட பின்னரே மாநாட்டிற்கு செல்ல வேண்டும் என்றும், இல்லையென்றால் அவர் மாநாட்டிற்கு வரவே கூடாது என்றும், இந்துக்களை வாக்கு அரசியல் காக மட்டுமே பயன்படுத்திக் கொள்வதையும் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி குறித்த விவகாரத்தில், முதலமைச்சர் ஸ்டாலின் தனது தந்தையிடமிருந்து பாடம் கற்றுக் கொண்டதாகவும், கருணாநிதி எப்படி கடைசிவரை ஸ்டாலினுக்கு முதலமைச்சர் பதவியை கொடுக்காமல் இருந்தாரோ அதுபோலவே ஸ்டாலினும் நினைக்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது என்றும் தெரிவித்தார்.

முத்தமிழ் முருகன் மாநாடை முன்னிறுத்தி ஆண்டுதோறும் நடைபெறும் கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்கு பழனியில் தடை விதித்தால் தடையை மீறி விழா நடக்கும் என்றும் எச். ராஜா தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ், நிர்வாகிகள் ஆனந்த், வழக்கறிஞர் திருமலை சாமி உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

  • Pushpa 2 Stampede CM Revanth Reddy Order to Tollywoodரசிகர்களை கட்டுப்படுத்த வேண்டியது பிரபலங்களின் பொறுப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு!
  • Views: - 317

    0

    0