கவரிங் நகைகளை வைத்து 5 சவரன் தங்க நகை திருட்டு : தாய், மகளை கைது செய்த போலீஸ்..!!
Author: Babu Lakshmanan17 August 2022, 9:42 pm
கோவை : நகைக்கடையில் கவரிங் நகைகளை கொடுத்து விட்டு 5 பவுன் தங்க நகையை திருடிய தாய் மற்றும் மகளை போலீசார் கைது செய்தனர்.
கோவை பெரிய கடைவீதியை சேர்ந்தவர் சிவக்குமார் (48). நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று சிவக்குமார் கடையில் இருந்த போது, 2 பெண்கள் பர்தா அணிந்தபடி கடைக்கு வந்தனர். அவர்கள் 5 பவுன் தங்க செயின் வேண்டும் என கேட்டனர். கடையில் இருந்த ஊழியர் நகைகளை காண்பித்து கொண்டு இருந்தார்.
ஒவ்வொரு நகையாக வாங்கி பார்த்த அவர்கள் செயின் வேண்டாம் என கூறிவிட்டு சென்று விட்டனர். அவர்கள் சென்ற பின்னர் ஊழியர் நகைகளை எடுத்து வைப்பதற்காக சோதனை செய்தனர். அப்போது அதில் 5 பவுன் எடையில் கவரிங் நகை இருந்தது. அந்த 2 பெண்களும் ஊழியரின் கவனத்தை திசை திருப்பி கவரிங் செயினை வைத்துவிட்டு, 5 பவுன் தங்க செயினை திருடி சென்றது தெரியவந்தது.
இதில் அதிர்ச்சியடைந்த சிவக்குமார் இது குறித்து பெரியகடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் நகையை திருடி சென்றது மதுரை உசிலம்பட்டி அருகே உள்ள கீழ மாதிரையை சேர்ந்த சுமதி (50) என்பதும், அவரது மகள் பிரியதர்ஷினி (28) ஆகியோரை கைது செய்தனர். மேலும் இவர்கள் வேறு எங்கேயாவது இதுபோன்று கைவரிசை காட்டினார்களா என விசாரணை நடத்தி வருகிறார்கள்.