கோவை விமான ஓடுதளம் அமைப்பதில் முறைகேடு.. மத்திய அரசுக்கு தென்மண்டல ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் கடிதம்..!!

Author: Babu Lakshmanan
5 July 2023, 5:06 pm

கோவை விமான ஓடுதளம் அமைப்பதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி இந்திய விமான நிலையங்களின் ஆணையத்திற்கு தென்மண்டல ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

இது தொடர்பாக எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது :- கோவை விமான நிலையத்தின் விமான ஓடுதளம் அமைப்பதற்கான டெண்டர் குறித்த அறிவிப்பை இந்திய விமான நிலையங்களின் ஆணையம் வெளியிட்டது.
மொத்தம் ரூ.46.32 கோடி மதிப்பிலான இந்த விமான ஓடுதளம் அமைக்கும் பணிகளுக்கு ரூ.72 லட்சம் உறுதித் தொகையாக செலுத்த ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி, கடந்த 2022ம் ஆண்டு ஜனவரி 25ம் தேதி ரூ.11,800 செலுத்தி, டெண்டருக்கான ஆவணங்கள் பெறப்பட்டு, பிப்ரவரி 24ம் தேதிக்குள் அனைத்து ஆவணங்களும் சமர்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இரு கட்டங்களாக நடைபெற்ற டெண்டர் ஏலத்தில், RDS project ltd, SRC Project private limited, NSC project PVT ltd, M/S SBG infracon Pvt.Ltd, M/s Vishal Infra structure Ltd,KCP Infra limited , JKG infratech private limited, M/s Brahma infra, ATR Infra project Pvt. Ltd ஆகிய 9 நிறுவனங்கள் கலந்து கொண்டன.

இதில், குறைந்த விலையில் ஏலத்தொகையை தீர்மானித்த JKG infratech private limited எனும் நிறுவனத்திற்கு இந்த டெண்டர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஒரு ஸ்கொயர் மீட்டருக்கு ரூ.500 வீதம், மொத்தம் 35,900 ஸ்கொயர் மீட்டருக்கு ரூ.1,79,50,000க்கு அந்த நிறுவனத்தால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

மாதத்திற்கு லட்சக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தும் கோவை விமான நிலையத்தின் ஓடுதளத்தினை அமைக்க இவ்வளவு குறைவான தொகைக்கு டெண்டர் எடுக்கப்பட்டிருப்பதால் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளது.

ஏதேனும் ஒரு பொருட்களின் விலை நம்பத்தகாததாக தோன்றினால், அத்தகைய டெண்டர் சமச்சீரற்றதாகக் கருதப்படும். மேலும், இது தொடர்பாக திருப்திகரமான விளக்கத்தை கொடுக்க முடியாவிட்டால் அத்தகைய டெண்டர் தகுதியற்றது எனக் கூறி நிராகரிக்கப்படும் என்பது டெண்டரின் விதியாகும்.

அப்படி இருக்கையில், இவ்வளவு குறைவான தொகையில் ஓடுதளத்தை அமைப்பது மிகவும் சவாலானதாகும். மேலும், இலாப நோக்கத்தை கருத்தில் கொண்டு, தரமற்ற பொருட்களை பயன்படுத்தி இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதுமட்டுமில்லாமல், போதுமான மற்றும் தகுதிவாய்ந்த பணியாளர்களை ஈடுபடுத்தவில்லை என்று கூறப்படுகிறது. எனவே, கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களின் தரத்தை அதிகாரிகளின் மூலம் ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

குறிப்பாக, குறைந்த தொகையில் டெண்டர் எடுக்கப்பட்டுள்ளதால், ரூ.10 கோடி மதிப்பில் Batching Plant-ஐ பயன்படுத்தி அமைக்க வேண்டிய ஓடுதளத்தை, ரூ.40 லட்சம் மதிப்பிலான தரமற்ற Drum Mix Plant-ஐ பயன்படுத்தி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரருக்கு பில் தொகையை விடுவிக்காமல், தரமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகளை மீண்டும் செய்து கொடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

அரசின் நிபந்தனைகளை கருத்தில் கொண்டு, கோவை விமான நிலையத்தின் ஓடுதளத்தை அமைப்பதில் முறைகேடு செய்துள்ள JKG infratech private limited நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என இந்திய விமான நிலையங்களின் ஆணையத்திற்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

  • Revanth Reddy on Pushpa 2ரேவந்த் ரெட்டியை சந்திக்க தயார்…அல்லு அர்ஜுனுக்கு ஆதரவாக கிளம்பிய திரையுலகினர்..!
  • Views: - 452

    1

    0