கோவை விமான நிலையத்தில் ரூ.125 கோடியில் புதிய கட்டடம் வருமா? வராதா? ஒரு வருடமாக இழுபறி : 3வது முறையாக டெண்டர் ரத்து!!
Author: Udayachandran RadhaKrishnan3 June 2022, 5:29 pm
கோவை : சர்வதேச விமான நிலைய புறப்பாடு பகுதியில் 125 கோடி மதிப்பில் புதியதாக கட்டடம் கட்டப்பட டெண்டர் மூன்றாவது முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
கோவையில் சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் வருகை பகுதியில் சர்வதேச தரத்திலான அந்தஸ்துடன் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் பயணிகள் புறப்பாடு பகுதி தற்போது வரை பழைய கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
விமான நிலையத்தில் நோய் தொற்று பரவும் முன் பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுக்கு 30 லட்சம் வரை அதிகரித்தது. இதனை கருத்தில் கொண்டு பயணிகள் புறப்பாடு பகுதி அமைந்துள்ள பழைய கட்டிடத்தை இடித்து புதிய புறப்பாடு டெர்மினல் கட்டடம் 125 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்க 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முடிவு செய்யப்பட்டது.
இதற்கான தொடர்ந்து இதற்கான டெண்டர் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த டெண்டர் இரண்டு முறை ரத்து செய்யப்பட்ட நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மீண்டும் டெண்டர் வெளியிடப்பட்டது. இந்த சூழலில் நேற்று திடீரென மூன்றாவது முறையாக டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது.
விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் கேட்டபோது புதிதாக அமைக்க திட்டமிடப்பட்டு டெர்மினல் கட்டுமான பணிக்கான டெண்டர் நிர்வாக காரணங்களால் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.