தனியார் குடோனில் 1.5 டன் குட்கா பதுக்கல் ; 4 பேர் கைது… கோவையில் வெட்ட வெட்ட தழைக்கும் கஞ்சா கலாச்சாரம்!!
Author: Babu Lakshmanan8 December 2022, 2:35 pm
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் தனியார் குடோனில் பதுக்கி வைத்திருந்த 1.5 டன் குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், இது தொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.
கோவை மாவட்டத்தில் கஞ்சா, தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனையை தடுக்க எஸ்பி பத்ரி நாராயணன் தனிப்படை அமைத்து உத்தரவிட்டுள்ளார். தனிப்படை போலீசார் மாவட்டம் முழுவதும் அதிரடி சோதனையில் ஈடுபட்டு, போதை பொருட்கள் விற்பனையில் ஈடுபடும் நபர்களை கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள குடோனில் சட்ட விரோதமாக குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், சூலூர் பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் உள்ள தனியார் குடோனில், தனிப்படை போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஏராளமான குட்கா புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனை அடுத்து, குடோனில் இருந்த சுமார் 1.5 டன் குட்கா பொருட்களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
வெளி மாநிலத்தில் இருந்து குட்கா பொருட்களை கடத்தி வந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சுதாகரன்(43), குருநாதன் எத்திராஜ் (50), செல்வகுமார் (47), சிவகுமார் (38) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
தொடர்ந்து, பிடிபட்ட குட்கா பொருட்கள் மற்றும் கைதான நபர்களை, சூலூர் காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர். அங்கு 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.