சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளான கார்.. கதவை திறந்து பார்த்த கோவை போலீஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி…!!
Author: Babu Lakshmanan18 July 2023, 10:11 am
கோவை குட்கா பொருட்களை கடத்தி வந்த சொகுசு கார் விபத்துக்குள்ளானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை, பொள்ளாச்சி சாலையில் கோவை நோக்கி TN 21 BA 1830 என்ற பதிவு எண் கொண்ட சொகுசு கார், அதிவேகமாக வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் சுந்தராபுரம் காந்தி நகர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் நடுவில் இருந்த டிவைடரில் மோதி விபத்துக்குள்ளானது.
அதனை அடுத்து காரில் இருந்த இருவர் தப்பிச் சென்றிட இது குறித்து அப்பகுதி மக்கள் சுந்தராபுரம் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். பின்னர், சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் காரை சோதனையிட்டபோது, காருக்குள் பல லட்சம் மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மூட்டை மூட்டையாக இருந்தது தெரியவந்தது.
இதனை அடுத்து, காரையும் குட்கா பொருட்களையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் இது குறித்து விசாரணையை துவக்கி உள்ளனர். கார் யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. காரை ஒட்டி வந்தவர்கள் யார் என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.