கோவைக்கு ஒரு ஆபத்து இருக்கு ; உளவுத்துறை நடவடிக்கையை CM ஸ்டாலின் ஆய்வு செய்ய வேண்டும் ; கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தல்

Author: Babu Lakshmanan
27 October 2022, 3:46 pm

கோவை : கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தை தொடர்ந்து, தமிழக அரசு உளவுத்துறை நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கோவையில் செய்தியாளர்களை சந்தித்த போது அவர் பேசியதாவது :- 1998ம் ஆண்டு நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவம் நாட்டையே உலுக்கியது. அதற்கு பிறகு ஒரு பதற்றம் கோவையில் ஏற்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அமைதியை விரும்புகிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் அன்றைய முதல்வராக இருந்த எடப்பாடி பழனிச்சாமி மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

கோவையில் ஒரு ஆபத்து இருப்பது தெரிய வருகிறது. டிஜிபி துரிதமாக செயல்பட்டு நடவடிக்கைகள் மேற்கொண்டது மற்றும் தமிழக முதல்வர் இந்த வழக்கை என்ஐஏவிற்கு மாற்றி இருப்பது பாராட்டத்தக்கது. தமிழக அரசு உளவுத்துறை நடவடிக்கை குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.

உளவுத்துறையை மேலும் பலப்படுத்த வேண்டும். என்ஐஏ புலனாய்வு செய்ததிலும் குறைபாடு உள்ளதை கருத்தில் கொள்ள வேண்டும். என்ஐஏ-வால் கூட முன் கூடியே கைது செய்யப்பட்டவர்கள் குறித்து கண்காணிக்கப்படாதது கேள்விக்குறியாகியுள்ளது. கோவையில் மத அடிப்படையில் மக்களை பிரித்துப் பார்க்காமல் நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.

அனைத்துக் கட்சி கூட்டத்தை மாவட்ட நிர்வாகம் நடத்த வேண்டும். அமைதியை நிலை நாட்ட வேண்டும். பாஜக 31ஆம் தேதி நடத்த இருக்கும் பந்த் தேவையா என்பதை யோசிக்க வேண்டும். அரசியல் ஆதாயத்தோடு நடத்தப்படும் போராட்டங்கள் தேவையா என மக்கள் எண்ணிப்பார்க்க வேண்டும்.

பதற்றமான சூழ்நிலையில் போராட்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும். அனைவரும் இணைந்து அமைதியை காக்க செயல்பட வேண்டும். விசாரணை நடைபெறுவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும். யாரோ சிலர் செய்யும் தவறுக்காக ஒட்டுமொத்த சிறுபான்மை மக்களையும் குற்றம் சுமத்த முடியாது, என தெரிவித்துள்ளார்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 464

    0

    0