உயிரிழந்த ஜமீஷா வீட்டில் வெடிகுண்டு தயாரிக்கும் மருந்துகள்… வெடித்த காரில் இருந்தும் பொருட்கள் பறிமுதல் : டிஜிபி சைலேந்திரபாபு பகீர் தகவல்
Author: Babu Lakshmanan25 October 2022, 9:42 am
கோவை : கோவையில் கார் வெடித்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவரின் வீட்டில் வெடிகுண்டு தயாரிக்கும் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
கோவை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் டிஜிபி சைலேந்திரபாபு செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இவருடன் ஏடிஜிபி தாமரைக்கண்ணன் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உடன் இருந்தனர்.
இந்த செய்தியாளர் சந்திப்பில் டிஜிபி சைலேந்திரபாபு பேசியதாவது :- கோவையில் காலையில் நடந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த சம்பவத்தில் இறந்து போன நபர் அடையாளம் தெரியவந்துள்ளது. ஜமீஷா என்பவர் 25 வயது மதிக்கத்தக்கவர். அந்த இடத்தில் இறந்து உள்ளார்.
அவருக்கு காரில் சில தடையங்கள் கிடைத்துள்ளது. ஆணிகள் கோழி குண்டு பொருட்கள் கிடைத்துள்ளது. அந்த காரில் பொருட்கள் கைப்பற்றியுள்ளோம். தடைய அறிவியல் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார்கள். இந்த நபருடைய வீடு சோதனை செய்ததில், ஸ்லோ என்டென்சி எக்ஸ்பிளோசிஸ் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினிய பவுடர் சல்பர் போன்ற சில பொருட்கள் கைப்பற்றியுள்ளோம்.
ஏற்கனவே வழக்குகள் இல்லை. இருந்தாலும் இவருக்கு தொடர்புடைய சில நபர்களை விசாரித்து வருகிறோம். இந்த சம்பவத்தை பொறுத்தவரை உடனடியாக 12 மணி நேரத்திற்குள்ளாக குற்றவாளி யார்..? இந்த நபர் யார்..? எப்படி நடந்துள்ளது கண்டுபிடித்துள்ளோம்.
அந்த காரை இடையில் 9 பேர் விற்று உள்ளார்கள். பத்தாவது நபர்தான் இந்த கார் வாங்கி உள்ளார். சிலிண்டர் எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடித்துள்ளோம். அவருடைய அடையாளத்தை கண்டுபிடிக்க கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், துணை ஆணையர் துரிதமாக செயல்பட்டார்கள். அவர்களுக்கு நாங்கள் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறோம். ஆறு முக்கியமான புலன் விசாரணை பிரிவு ஆய்வு நடத்தினார்கள்.
2019ல் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை செய்து உள்ளனர். இவர் மீது வழக்குகள் கிடையாது. சம்பவ இடத்தில் போலீஸ் செக் போஸ்ட் உள்ளது. அதனைத் தாண்டி அவர் போக முடியவில்லை. புலன் விசாரணை செய்து வருகிறோம். தற்கொலை முயற்சி வாய்ப்பு குறைவு. இவர் இன்ஜினியரிங் முடித்துள்ளார்.
இவர் செல்போனில் உள்ள தொடர்பில் உள்ள அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஆறு தனிப்படை மூலமாக துரிதமாக செயல்பட்டோம். ஏடிஜிபி தாமரைக்கண்ணன் மிகப்பெரிய வழக்குகளை கையாண்டவர். மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர், கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அனைவரும் சிறப்பாக பணியாற்றினார்கள்.
ஒவ்வொரு தனிப்படைகளும் குறிப்பிட்ட ஒவ்வொரு நடைமுறை நாங்கள் கண்டுபிடித்தோம். இந்த வழக்கை பொறுத்தவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரியிடம் கொண்டு போக வாய்ப்புள்ளது. மேலும், கோவையில் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பணி போடப்பட்டுள்ளது, என தெரிவித்தார்.