கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம் : நள்ளிரவில் உக்கடம் பகுதியில் குவிந்த போலீசார்.. குற்றவாளிகளுடன் வந்ததால் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
11 January 2023, 8:43 am

கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 4 பேரை கோட்டைமேடு பகுதியில் உள்ள ஜமீஷா முபீனின் இல்லத்திற்கு நள்ளிரவில் அழைத்து வந்து தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

கோவை உக்கடம் கோட்டை மேடு பகுதியில், கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக அக்டோபர் மாதம் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது.

தீவிரவாத நோக்குடன் நடத்தப்பட்ட இந்த தற்கொலை படை தாக்குதலில் ஜமிஷா முபின் உயிரிழந்தார். இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இவ்வழக்கில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 5 பேரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தி முடித்துள்ளனர்.

இந்நிலையில் முகமது தல்கா, முகமது ரியாஸ், முகமது நவாஸ், முகமது தௌபிக், சனாபர் அலி, ஷேக் இதயத்துல்லா ஆகிய 6 பேரை காவலில் எடுத்து சென்னையில் வைத்து விசாரித்து வந்த தேசிய புலனாய்வு அதிகாரிகள் 6 பேரையும் நேற்று காலை கோவை அழைத்து வந்து காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து விசாரணை நடத்தினர்.

இந்நிலையில் இவர்களில் சனாபர் அலி, முகமது ரியாஸ்,நவாஸ், தௌபிக் ஆகிய 4 பேரை மட்டும் நள்ளிரவு 11.30மணி அளவில் கோட்டை மேடு பகுதியில் உள்ள ஜமீஷா முபின் இல்லத்திற்கு அழைத்து வந்தனர்.

தேசிய புலனாய்வு முகமை அமைப்பின் எஸ்.பி. ஸ்ரீஜித் தலைமையில் நான்கு பேரிடமும் விசாரணையானது நடத்தப்பட்டது. மேலும் ஜமீஷா முபீனின் வீட்டில் இருந்த சந்தேகத்திற்கிடமான பொருட்கள் குறித்தும் 4 பேரிடமும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

இதனையடுத்து 4 பேரையும், உக்கடம் பகுதியில் உள்ள சனாபர் அலியின் வீடு மற்றும் ஜி. எம். பேக்கரி உள்ளிட்ட இடங்களுக்கும் அழைத்து சென்று தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதுடன் அதை வீடியோ பதிவாகவும் பதிவு செய்து கொண்டனர்.

  • Anitha Vijayakumar Viral Video நடிகர் விஜயகுமாரின் மகள் அனிதாவின் உருக்கமான பகிர்வு…வைரலாகும் வீடியோ!