கோவை கார் வெடிப்பு சம்பவம் ; உயிரிழந்த ஜமேஷா முபினின் உறவினர் கைது.. 6 பேரிடம் போலீசார் தீவிர விசாரணை..!!

Author: Babu Lakshmanan
27 October 2022, 10:49 am

கோவை ; கோவையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் ஒருவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

கோவை மாவட்டம் உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் வெடித்துச் சிதறியது. அதில் உக்கடம் ஜி.எம். நகர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பவர் உடல் கருகி உயிரிழந்தார். கார் வெடித்து சிதறிய இடத்தில் ஆணிகள் கோழிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டன.

இது குறித்து உக்கடம் போலீசார் விசாரணை மேற்கொண்டதில் முபினிடம், 2019ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் அவரிடம் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, கோவை மாநகரப் பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர், பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற பொருட்கள் என மொத்தம் 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றினர் என தகவல் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியது.

மேலும், இவ்வழக்கிற்காக 6 தனிப்படைகள் அமைக்கபட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடைப்பெற்று வருகிறது. இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை உக்கடம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவர்கள் 5 பேர் மீதும் உபா சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இதனை தொடர்ந்து, கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை நடத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார்.

இதனால், இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு ஒப்படைக்கப்பட உள்ளது. இதனிடையே, தேசிய புலனாய்வு முகமை டிஐஜி வந்தனா மற்றும் எஸ்.பி. ஸ்ரீஜித் ஆகியோர் கோவையில் முகாமிட்டுள்ளனர். காவல் துறை அதிகாரிகளிடம் இந்த வழக்கு தொடர்பான விபரங்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கேட்டறிந்தனர்.

இந்நிலையில், கோவை கார் வெடிப்பு கைதான முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை காவலில் எடுத்து விசாரிக்க கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் காவல் துறையினர் மனு தாக்கல் செய்தனர்.
5 பேரையும் 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி ராஜசேகர் உத்தரவிட்டார்.

கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாகவும், அதில் அவர்களது பங்கு உள்ளதா என்பது குறித்தும் 5 பேரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது ஜமேஷா முபினின் உறவினரான அப்பகுதியை சேர்ந்த அப்சர்கான் என்பவர் தனிப்படை போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே இவர் காவல்துறையினரின் விசாரணை வளையத்தில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 476

    0

    0