கோவையில் கார் வெடித்த சம்பவம்: ஜமேசா முபின் தூக்கி கொண்டு சென்ற மர்ம பொருள் என்ன..? சிக்கியது முக்கிய சி.சி.டி.வி ஆதாரம்..!

Author: Vignesh
24 October 2022, 12:43 pm

கார் தீ பற்றிய சம்பவத்தில் ஜமேஷா முபின் வீட்டில் இருந்து மர்ம மூட்டை எடுத்து செல்லும் நபர்களின் சிசிடிவி காட்சிகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

கோவை உக்கடம் கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக நேற்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்து சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். சத்தம் கேட்ட பொது மக்கள் உடனடியாக தீயணைப்பு துறைக்கும் ,காவல் துறைக்கும் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டனர். தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். முதல்கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறி இருப்பது தெரியவந்தது.

காரின் பதிவு எண் பொள்ளாச்சி முகவரியில் இருப்பதால் , அந்த முகவரி குறித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனையடுத்து கோட்டை ஈஸ்வரன் கோவில் வீதிக்கு செல்லும் பாதைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்களும், வெடிகுண்டு தடுப்பு பிரிவு போலீசாரும், மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு விசாரணையானது நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் சம்பவ இடத்தில் சந்தேகத்திற்கு இடமாக கிடந்த ஆணிகள், கோலி குண்டுகள், பால்ராஸ் குண்டுகளை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் கோவை விரைந்த டிஜிபி சைலேந்திர பாபு சம்பவ இடத்தில ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது ; காரை இதற்கு முன் வைத்திருந்தவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது. உயிரிழந்தவரின் விவரங்களை சேகரித்து வருகிறோம் அணைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

car -updatenews360 2

தடவியல் துறை சம்பவ இடத்தில ஆய்வு செய்து வருகின்றனர்.இது தொடர்பாக 6 தனிப்படை அமைத்து விசாரணை நடந்து வருகிறது என தெரிவித்தார்.

இந்த நிலையில், சிலிண்டர் வெடித்து இறந்த ஜமேஷா முபின் சனிக்கிழமை இரவு வீட்டிலிருந்து வெளியேறிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. இந்த சிசிடிவி காட்சிகள் ஜமேஷா முபின் உள்ளிட்ட 5 பேர் இருக்கின்றனர். அவர் உடன் இருந்தவர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ஜமேசா முபீன் வீடு இருக்கும் பகுதியில் உள்ள சி.சி.டி.வி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அந்த சி.சி.டி.யி.யில் ஜமேசா முபினுடன் சில நபர்கள் இணைந்து ஜமேசா முபின் வீட்டில் இருந்து சில மர்மமான பொருட்களை எடுத்து செல்வது தொடர்பான காட்சிகள் கிடைத்துள்ளன.

இந்த சம்பவம் நடந்த ஞாயிற்றுக்கிழமைக்கு முன்தினமான சனிக்கிழமை இரவு 11.30 மணி அளவில் இது நடந்துள்ளது. அதன் அடிப்படையில் ஜமேசா முபினுடன் தொடர்பில் இருந்தவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

அவர்கள் எடுத்து சென்ற பொருள் என்ன? எதற்காக எடுத்து சென்றனர்? இந்த விபத்து இல்லாமல் வேறு ஏதேனும் திட்டத்துடன் அவர்கள் செயல்பட்டுள்ளனரா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்துவருகின்றனர்.

  • ajith-sir-gives-the-title-good-bad-ugly-said-by-adhik-ravichandran டைட்டில் வச்சதே அஜித்சார்தான்- ஆச்சரிய தகவலை பகிர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன்