உல்லாச வாழ்க்கையை வாழ வழிப்பறியர்களாக மாறிய காதலர்கள்… ஜோடியாகவே சிறைக்கு சென்ற சம்பவம்!!

Author: Babu Lakshmanan
3 May 2022, 12:22 pm

இருசக்கர வாகனத்தில் வந்து மூதாட்டியிடம் தங்கச் செயினை பறித்துச் சென்ற காதலர்களை கோவையில் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை அருகே ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டியிடம் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் 5 சவரன் தங்கச் செயினை பறித்துச் சென்ற சம்பவத்தில் உல்லாசமாக ஊர்சுற்ற வழிப்பறியில் ஈடுபட்ட இளம் காதல் ஜோடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை சேர்ந்தவர் காளியம்மாள். இவர் கடந்த மாதம் 28ம் தேதி நரசிபுரம் சாலையில் உள்ள தீயணைப்பு நிலையம் அருகே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இளம் ஜோடி மூதாட்டியிடம் முகவரி கேட்பது போல் நடித்து, கண்ணிமைக்கும் நேரத்தில் மூதாட்டி காளியம்மாள் அணிந்திருந்த 5 சவரன் தங்க நகையை பறித்து விட்டு தப்பினர்.

இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில் காளியம்மாளின் தங்கச் செயினை பறிக்க பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை கண்டுபிடித்தனர். வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு அதன் உரிமையாளரான சோமையம்பாளையத்தை சார்ந்த பிரசாத் (20), மற்றும் சுங்கம் பகுதியை சார்ந்த இளம் பெண் தேஜஸ்வினி (20) ஆகியோரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் இருவரும் பேரூர் பச்சாபாளையம் பகுதியிலுள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் மூன்றாவது ஆண்டு படித்து வருவதும், காதலர்களான இருவரும் தொழிலதிபர்களின் வாரிசுகள் என்பதும், உல்லாசமாக காதலியுடன் ஊர் சுற்ற சில மாதங்களுக்கு முன்னர் பிரசாத் தனது வீட்டில் இருந்த 30 சவரன் நகையை திருடி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

நகைகள் திருடு போனது தொடர்பாக காவல்துறை விசாரித்த போது, தங்களது மகன் பிரசாத் தான் திருடன் என தெரிந்ததால் அவரது பெற்றோர் புகாரை திரும்பப் பெற்றிருப்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதேபோல, ஆன்லைன் மூலம் பந்தயத்தில் ஏராளமான பணத்தை பிரசாத் இழந்ததால், நகை பறிப்பில் ஈடுபட முடிவு செய்து, இதற்கு உடந்தையாக காதலியை பயன்படுத்தி நகை பறிப்பில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் 5 சவரன் தங்கச் செயினை கைப்பற்றி இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 1379

    0

    0