கோவையில் அமைதியை சீர்குலைத்து பெட்ரோல் குண்டுவீச்சு.. குற்றவாளிகளை நெருங்கிய போலீஸ் ; காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அதிரடி

Author: Babu Lakshmanan
24 September 2022, 4:23 pm
Quick Share

கோவை : பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் ஈடுபட்ட ஒரு சிலர் கண்டறியப்பட்டுள்ளனர் எனவும், நகரின் அமைதியை சீர்குலைப்பவர்கள் மீது குண்டர்சட்டம் பாயும் என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம், ஒப்பணக்கார வீதியில் உள்ள மாருதி என்ற துணிக்கடை, காந்திபுரம் பகுதியில் பாஜக நிர்வாகி மோகன் என்பவரது கடை, மேட்டுப்பாளையம் பகுதியில் பர்னிச்சர் கடை, கோவைப்புதூர் பகுதியில் உள்ள ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ஆனந்த கல்யாண கிருஷ்ணன் மற்றும் குனியமுத்தூர் பகுதியில் பாஜகவை சேர்ந்த தியாகு ஆகியோரது வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது.

இதேபோல, பொள்ளாச்சி மற்றும் குனியமுத்தூர் பகுதிகளில் இந்து முன்னணி, பாஜக நிர்வாகிகளின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன. சாய்பாபாகாலணி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு இரு சக்கர வாகனத்திற்கு தீ வைக்கப்பட்டது. இதன் காரணமாக பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

இந்த தொடர் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தை தொடர்ந்து கோவை மாநகரில் காவல் துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. காவல் துறையினர் மட்டுமின்றி சிறப்பு காவல் படை, தமிழ்நாடு காமாண்டோ படை, அதிவிரைவுப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர்.

மொத்தமாக கோவை மாநகர காவலர்கள் மற்றும் வெளிமாவட்ட காவலர்கள் என மொத்தம் 4000 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். கோவை நகருக்குள் நுழையும் வழியில் 11 சோதனை சாவடிகள் தவிர, கூடுதலாக நகரில் 28 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகின்றது.

ஒரு காவல் நிலையத்திற்கு 3 ரோந்து வாகனங்கள் வீதம் 15 காவல் நிலையத்திற்கு 45 ரோந்து வாகனங்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தபட்டுள்ளனர். கோவை ரயில் நிலையம், பேருந்து நிலையம் உட்பட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனிடையே கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் சமீரன், கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். மேலும், இஸ்லாமிய இயக்கத்தின் பிரதிநிதிகளை அழைத்து அவர்களுடன் அமைதிக் கூட்டமும் போடப்பட்டது.

பின்னர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், மேற்கு மண்டல காவல் துறைத் தலைவர் சுதாகர், மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உள்ளிட்ட அதிகாரிகளுடன், வீடியோ கான்பரன்ஸ் மூலம் தலைமை செயலாளர் இறையன்பு ஆலோசணை மேற்கொண்டார்.

சட்டம் ஒழுங்கு தொடர்பாக இந்த ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசணை கூட்டத்திற்கு பிறகு கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது :- தலைமை செயலாளர் தலைமையில் 17 மாவட்ட உயரதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பான கூட்டம் நடைபெற்றது. கோவையில் தொடர் சம்பவங்கள் குறித்து கேட்டறிந்தார்.

கோவை மாவட்டத்தில் நடந்த 7 சம்பவங்களில் உயிர் மற்றும் உடமைகள் சேதம் அடையவில்லை. பொது மக்கள் பதட்டமோ, அச்சமோ பட வேண்டிய சூழல் இல்லை. சிடிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். மத நல்லிணக்கத்திற்கான கூட்டங்கள் நடத்தி வருகிறோம். 94 ஜமாத் தலைவர்களுடன் கூட்டம் நடைபெற்றது. மாலை இந்து அமைப்புகளின் தலைவர்களுடன் கூட்டம் நடைபெற உள்ளது. அவர்கள் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

ஊரக மற்றும் மாநகரப் பகுதிகளில் சம்பவங்கள் நடந்தாலோ, வெளி மாநிலம் அல்லது வெளி மாவட்ட நபர்கள் இருந்தால் மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் தகவல் அளிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒரு சில சமூக வலைதளங்களில் மக்களிடம் பதட்டத்தை உருவாக்கும் வகையில் வெடிகுண்டு வீசப்பட்டதாக செய்திகள் பரவி வருகிறது.

வெடிகுண்டு வீச்சு நடைபெறவில்லை. இன்னும் ஒரிரு நாளில் தனிப்பட்ட சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும்,” எனத் தெரிவித்தார்.

இதையடுத்து, பேசிய மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் :- அனைத்து சம்பவங்களிலும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறோம். இரு சக்கர வாகனங்கள் வேகமாக செல்வதால் பைக் எண்ணை சிசிடிவியில் கண்டறிவதில் தாமதம் ஏற்படுகிறது. ஒரு சில குற்றவாளிகள் அடையாள காணப்பட்டுள்ளனர்.

சமூக வலைதளங்களில் தவறான தகவல் பரப்புதல், இரு தரப்பினர் இடையே பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் பதிவிடுபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். அமைதியை சீர்குலைப்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். கோவையில் 3500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் கண்காணிக்கப்படுகிறது. 28 புதிய சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன, எனத் தெரிவித்தார்.

  • Vijay கமலுக்கு No.. சீமானுக்கு Yes.. விட்டுக் கொடுக்காத விஜய்
  • Views: - 452

    0

    0