மனு கொடுக்க வந்த இடத்தில் இருதரப்பினரிடையே மோதல்… கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
21 July 2023, 6:23 pm

நில தகராறு சம்பந்தமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே இரு தரப்பினரும் சண்டையிட்டுக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த ஒரு பெண்ணின் நிலத்தை ஒரு தரப்பினர் கேட்டதாக தெரிகிறது. அதற்கு 50 லட்சம் ரூபாய் விலை பேசிய நிலையில், நிலத்தை வாங்கும் தரப்பினர் 50 லட்சம் ரூபாய் பணத்தை அப்பெண்ணிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அப்பெண் நிலத்தைக் கிரையம் செய்து தராமல் 50 லட்சம் ரூபாய் பணத்துடன் தலைமறைவானதாக பணத்தை கொடுத்த தரப்பினர் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் இது குறித்து பணத்தை இழந்த தரப்பினர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடர்ந்துள்ளனர். தற்போது அந்த சிவில் வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அப்பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தனது இடத்தில் அத்துமீறி சிலர் கட்டிடம் கட்டி வருவதாக புகார் மனு ஒன்றை அளிக்க வந்துள்ளார். இதனை அறிந்து கொண்ட பணத்தை கொடுத்த நபர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த பெண்ணிடம் இது குறித்த கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதுகுறித்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருவதாக அப்பெண் கூறிய நிலையில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் இரு தரப்பினரும் தாக்கிக் கொண்டனர். அப்போது அப்பெண்ணின் தரப்பினர் காரில் புறப்பட முயன்ற நிலையில், பணத்தை கொடுத்த தரப்பினர் அவர்களை செல்ல விடாமல் தடுத்து, கார் சாவியை பிடுங்கிக் கொண்டனர்.

மேலும், ஒருவரை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டி கொண்டனர். இதனிடையே, அப்பெண் தங்களது சொத்தை அபகரிக்க முயல்வதாகவும், தங்களை தாக்குவதாகவும் கூறி தங்களை காப்பாற்றுங்கள்.. காப்பாற்றுங்கள்.. என்று கதறினார். மேலும், தங்களை தாக்க வந்தவர்கள் யார் என்று தெரியாது எனவும் கூறினார். மேலும், தங்களை கொலை செய்ய பார்ப்பதாகவும் கூறி கதறி அழுதார்.

இதனிடையே, 50 லட்சம் ரூபாய் வாங்கியதையும் அப்பெண் ஒப்புகொள்கிறார். ஆனால் நீதிமன்றத்தில் வழக்கு செல்வதால் நீதிமன்றம் வாயிலாக பணத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு அப்பெண் கூறுகிறார். இவர்களின் இந்த சண்டையால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த கோவை மாநகர பொருளாதர குற்றப்பிரிவு போலீசார் இருதரப்பினரையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

மேலும், அப்பெண் வந்த காரையும் காவல் துறையினர் எடுத்துச் சென்றனர். சிவில் வழக்கு என்பதாலும் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாலும், காவல்துறையினர் விசாரணைக்கு பின்பே பெயர்கள் மற்றும் முழு விவரங்கள் தெரியவரும்.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 335

    0

    0