தூய்மையான பகுதியை குப்பை கூளமாக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்… முகம் சுழிக்கும் பொதுமக்கள்… சமூக ஆர்வலர்கள் விடுத்த கோரிக்கை

Author: Babu Lakshmanan
5 February 2024, 11:28 am

கோவை மாநகராட்சியில் நடத்தப்படும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு அப்டவுன் கன்பிடிட்டி சார்பில் ‘ரன் ஃபார் கேன்சர்’ என்னும் புற்றுநோய் விழிப்புணர்வு மாரத்தான் கோவையில் உள்ள நேரு மைதானத்தில் அருகே தொடங்கியது. இந்த போட்டியை கோவை மாநகர ஹோம் கார்ட்ஸ் துணை ஏரியா கமெண்டர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பல்வேறு பயது பிரிவினர்களுக்கு இடையே நடந்த இந்த மாரத்தான் ஓட்டம், நேரு மைதானத்தில் இருந்து கேரளா கிளப் வழியாக, மகளிர் பாலிடெக்னிக் வரை சென்று, அங்கிருந்து ஒசூ சாலை வழியாக, கேஜி மருத்துவமனை, ரேஸ்கோர்ஸ், ரெட்லிட்ஸ் வழியாக நிர்மலா கல்லூரியை வந்தடைந்தது. இந்தப் போட்டியில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

இதேபோல, பல்வேறு முக்கிய விழிப்புணர்வுகளுக்காக மாரத்தான் உள்ளிட்ட போட்டிகள் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளால் அடிக்கடி நடத்தப்பட்டு வருகிறது.

இதுபோன்று நிகழ்ச்சிகள் நடத்தப்படும் போது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும், நிகழ்ச்சி முடிந்த பிறகு அந்தப் பகுதிகளை குப்பை கூளங்களாக மாற்றி விடுவதாகவும் அடுக்கடுக்கான புகார் எழுந்த வண்ணம் இருந்து வருகிறது.

அண்மையில் ரேஸ்கோர்சிஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டிருக்கும் போது, அங்குள்ள ஒரு வீட்டில் அவசர மருத்துவ தேவைக்காக ஆம்புலன்ஸ் சேவை தேவைப்பட்டுள்ளது. ஆனால், வீட்டுக்குள் சென்ற ஆம்புலன்ஸ் மீண்டும் வெளிவர முடியாத நிலை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இது அப்பகுதியினரிடையே அதிருப்தியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இதுபோன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் வரவேற்கப்படும் விதமாக இருந்தாலும், முறைப்படி திட்டமிட்டு பொதுமக்கள் யாருக்கும் எந்த இடையூறும் ஏற்படாதவாறு நடத்தப்பட வேண்டும் என்று பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

அதேவேளையில், நிகழ்ச்சி முடிந்த பிறகு, போட்டிகளில் பங்கேற்பவர்களுக்கு வழங்கப்படும் தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்ட குப்பைகளை முறையாக அகற்றி, கோவை மாநகராட்சியை தூய்மையானதாக வைக்க ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் எண்ணமாக இருந்து வருகிறது.

  • ajith kumar asking for script to bala but bala did not give Full Script கொடுக்க மாட்டேன்- அஜித்தின் முகத்துக்கு நேராக சொன்ன பிரபல இயக்குனர்…