மக்களுக்கான திட்டம் எதுவும் இல்லை… கோவை மாமன்றக் கூட்டத்தில் அதிமுக வெளிநடப்பு… மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து தர்ணா போராட்டம்..!!
Author: Babu Lakshmanan26 May 2022, 5:36 pm
70 தீர்மானங்களில் மக்களுக்கான திட்டம் எதுவும் இடம்பெறவில்லை என அதிமுக கவுன்சிலர்கள் மாமன்ற கூட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாநகராட்சி மாமன்ற உறிப்பினர்களுக்கான சாதாரண கூட்டம் மூன்றாவது முறையாக நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள வந்த 47வது வார்டு அதிமுக கவுன்சிலர் பிரபாகரன், 90வது வார்டு அதிமுக கவுன்சிலர் ரமேஷ் ஆகியோர் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்து மாமன்ற அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாமன்ற உறுப்பினர் பிரபாகரன், கோவை மாநகராட்சியில் 12லட்சம் மக்கள் மீது சொத்து வரி உயர்வு சுமத்தியுள்ளதாகவும், மாமன்ற கூட்டத்தின்படி 3நாட்களுக்கு முன்பே தீர்மானங்களை கவுன்சிலர்களுக்கு கொடுக்க வேண்டும். ஆனால் நேற்று இரவு 8 மணிக்கு அவசரமாக கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய அவர், இதனை மாமன்ற உறுப்பினர்கள் எப்படி படித்து இருப்பார்கள் என கேள்வி எழுப்பினார்.
இதில் 70 தீர்மானங்கள் வந்துள்ளதாகவும், இந்த தீர்மானங்களில் மக்களுக்கான திட்டம் எதுவும் இடம்பெறவில்லை என தெரிவித்த அவர், இது திமுகவிற்கான ரகசிய கூட்டமாக நடைபெறுகிறது என தெரிவித்தார். கோவை மாநகராட்சியில் 350 கோடி வரி வசூல் செய்து சாக்கட்டை வசதி, குப்பை லாரி உள்ளிட்ட எந்த விதமான அடிப்படை வசதி இல்லை என தெரிவித்த அவர், வரி உயர்வு தீர்மானம், தனி கூட்டம், சிறப்பு கூட்டமாக நடத்தபட வேண்டும் என தெரிவித்தார்.
3 ஆயிரம் மக்கள் வரி உயர்வுக்கு எதிராக மனு அளித்துள்ளதாகவும், நிதிக்குழு கூட்டத்தில் மனு அளித்தவர்களின் லிஸ்ட் வைத்துள்ளதாக தெரிவித்தார். இந்த சொத்து வரி தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் எனவும், இதற்கு செவி சாய்க்கவில்லை என்றால், மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தார்.
கோவை மாநகராட்சியில் முன்னறிவிப்பு இல்லாமல் 16 நாட்களுக்கு ஒருமுறை தான் தண்ணீர் வருவதாக தெரிவித்த அவர், இதற்கு தகுந்த தீர்வு காண வேண்டும் என கேட்டுக்கொண்டார்.