இளம்பெண் நிவேதா மீண்டும் திமுக கவுன்சிலராக தொடர ஒப்புதல் ; தகுதி நீக்க முடிவை வாபஸ் பெற்றது கோவை மாநகராட்சி கவுன்சில்..!!

Author: Babu Lakshmanan
30 June 2023, 2:09 pm

தகுதி நீக்கம் செய்யப்பட்ட கோவை மாநகராட்சி பெண் கவுன்சிலர் நிவேதா மீண்டும் மாமன்ற உறுப்பினராக தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி 97வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் நிவேதா. திமுக கவுன்சிலர் ஆன இவர் கடைசியாக நடைபெற்ற மூன்று மாநகராட்சி சாதாரண கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை. தொடர்ந்து 3 கூட்டங்களில் கலந்துகொள்ளாததால் கவுன்சிலர் நிவேதா தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் தெரிவித்திருந்தார்.

மேலும், அடுத்த கூட்டத்தில் தகுதி நீக்கம் குறித்து மாநகராட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்படும். கவுன்சிலர் நிவேதா அளிக்கும் விளக்கத்தை மாநகராட்சி கூட்டம் ஏற்றுக்கொண்டு, ஒருமனதாக அனுமதி அளித்தால் அவர் கவுன்சிலராக பதவி நீடிக்க வாய்ப்பு உள்ளது என கூறப்பட்டது.

இந்த நிலையில், ஆணையரிடம் அவர் அளித்த விளக்கத்தை ஏற்றுதையடுத்து மாமன்ற கவுன்சிலர்கள் அவர் மீண்டும் கவுன்சிலராக தொடர ஒப்புதல் அளித்தனர். இதைத்தொடர்ந்து, இன்று நிவேதா சாதாரண கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து கோவை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் 97-வது வார்டு மாமன்ற உறுப்பினர் நிவேதா ஆணையருக்கு 23.06.2023ம் தேதி எழுதிய கடிதத்தில், தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், கடந்த 15.05.2023 அன்று நடைபெற்ற மாமன்றக் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை என்றும், எனவே தன்னை மீண்டும் 97-வது வார்டு மாமன்ற உறுப்பினராக ஏற்றுக்கொள்ளுமாறு தனது கடிதத்தில் விளக்கமாக தெரிவித்தார்.

அவரது வேண்டுகோளை மாமன்றத்தின் முடிவுக்காக ஆணையர் வைத்தார். அவரது கோரிக்கையை மாமன்ற கவுன்சில் ஏற்றுக் கொண்டதை அடுத்து அவர் மீண்டும் மாமன்ற உறுப்பினராக தொடர ஒப்புதல் அளிக்கப்பட்டது, இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Ajith viral interview இனியாவுது திருந்துங்க…ரசிகர்களை பார்த்து அஜித் கேட்ட நச் கேள்வி…வைரலாகும் வீடியோ..!