சலூன், ஸ்பா மற்றும் மசாஜ் பார்லர் நடத்துவோரின் கவனத்திற்கு…. கோவை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!!
Author: Babu Lakshmanan26 May 2023, 8:34 pm
கோவை ; முடிதிருத்த நிலையம், அழகு நிலையம், ஸ்பா மற்றும் மசாஜ் பார்லர் போன்றவை அனுமதியின்றி இயங்கக் கூடாது என கோவை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- கோவை மாநகராட்சியில் முடிதிருத்த நிலையம், அழகு நிலையம், ஸ்பா மற்றும் மசாஜ் பார்லர், நீராவி குளியல் தொட்டியுடன் கூடிய முடிதிருத்தம் / முடிசவரம் திருத்தம் தொழில் செய்யும் நிலையங்கள் மாநகராட்சியின் அனுமதியின்றி 01.02.2023 முதல் உரிமம் இன்றி நடத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், உரிம விண்ணப்ப கடிதத்தில் காவல் துறையினரின் தடையின்மைச் சான்றும் மற்றும் மாநகராட்சி மாநகர நல அலுவலர் அவர்களின் தடையின்மைச் சான்றும் பெறப்பட வேண்டும். மேற்காண்ட சான்றிதழ்கள் இல்லாவிடில் விண்ணப்பிக்க இயலாது அறிவிக்கப்படுகிறது.
மேற்காணும் நிறுவனங்கள் தங்களுக்கு உரிய நிறுவனத்திற்கான உரிமத் தொகையானது சாதாரண முடித்திருத்தும் நிறுவனங்களுக்கு ஒரு வருடத்திற்கு ரூ.200/-ம் மற்றும் அதே நிறுவனங்கள் குளிர்சாதன வசதிகள் பொருத்தப்பட்டிருக்குமாயின் ரூ.1,000/-ம் மற்றும் அழகு நிலையம், ஸ்பா, மசாஜ் பார்லர் மற்றும் நீராவி குளியல் தொட்டியுடன் கூடிய முடிதிருத்தம் போன்ற நிறுவனங்கள் 500 சதுரடி வரை என்றால் ரூ.5,000/-ம், 501 முதல் 1000 சதுரடி வரை ரூ.10,000/-ம், 1000 சதுரடிக்கு மேற்பட்ட நிறுவனங்களுக்கு ரூ.15,000/-ம் வருடாந்திர உரிமத் தொகை கட்டணமாக மாநகராட்சியில் செலுத்தி விண்ணப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட விபரங்கள் கோயம்புத்தூர் மாவட்ட சிறப்பு அரசிதழ் எண்.10 மே 23/2023-ம் ஆண்டு வெளியிடப்பட்டுள்ளது என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.