விளம்பர போஸ்டர்களால் அழுக்காகும் கோவை : அழகாக்கும் முயற்சியை கையில் எடுத்த கோவை மாநகராட்சி..!

Author: Babu Lakshmanan
6 July 2022, 4:02 pm

தமிழகத்திலேயே சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மாநகரமாக உள்ளது கோவை மாநகரம். கோவை மாநகரில் பெரும்பாலும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வந்தாலும், பல பகுதிகளில் விவசாயமும் நடைபெறுகிறது. இதனால் கோவை எழில் மிகு நகரமாக காட்சியளித்து வருகிறது.

இங்குள்ள சீதோஷன நிலை தமிழகத்தின் பிற மாவட்ட மக்களை மட்டுமல்லாது இந்திய அளவிலும் மக்களை ஈர்த்து வருகிறது. இப்படிப்பட்ட அழகான கோவையை சீர்குலைப்பது தான் போஸ்டர் கலாச்சாரம். கோவையின் மூலை முடுக்குகளில் எல்லாம் போஸ்டர் ஒட்டப்பட்ட நகரின் அழகு பாழ் படுத்தப்பட்டு வந்த சூழலில், மேம்பால தாங்கு தூண்களையும் போஸ்டர்கள் ஆக்கிரமித்துள்ளன.

கோவையின் முக்கிய சாலைகளான அவினாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் மற்றும் சத்தி சாலைகளில் மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மேம்பாலங்களில் ஏராளமான தாங்கு தூண்கள் உள்ளன. இந்த தூண்களில், அரசியல் கட்சிகள் உட்பட பல தரப்பட்ட விளம்பர போஸ்டர்களும் ஒட்டப்படுவதால் நகரின் அழகு கெடுவதாக நீண்டகாலமாக குற்றச்சாட்டு உள்ளது.

பிரதான சாலைகளில் ஒட்டப்படும் விளம்பர போஸ்டர்கள் ஆங்காங்கே கிழிந்து தொங்குவதால் ஒரு குப்பை நகரம் போல் காட்சியளிக்கத் துவங்கி விட்டது கோவை.

இந்த நிலையில் கோவை-திருச்சி சாலையில் அமைந்துள்ள மேம்பாலத்தின் சில தூண்களில் தேச தலைவர்களின் புகைப்படங்கள் இடம்பெற்றன. அந்த தூண்களில் விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்படுவது தடைப்பட்டது. தொடர்ந்து போஸ்டர் கலாச்சாரத்தை முற்றிலுமாக ஒழிக்க திட்டமிட்ட கோவை மாநகராட்சி நிர்வாகம், தூண்களில் விழிப்புணர்வு படங்கள் அடங்கிய ஓவியங்களை வரையும் முன்னெடுப்பைத் தொடங்கியது.

இதற்காக நெடுஞ்சாலைத்துறையில் அனுமதி கோரியது. அதன்படி, காந்திபுரம் கிராஸ்கட் சந்திப்பில் வரும் மேம்பாலத்தில் உள்ள ஒரு தூணில் ஓவியம் வரைய நெடுஞ்சாலைத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இந்த தூணில் குப்பைகளை தரம் பிரித்து கொட்டுவது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டு வருகிறது. இந்த பணியை நெடுஞ்சாலைத்துறையினரே மேற்கொண்டு வருகின்றனர்.

இது பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. கோவையில் உள்ள அனைத்து மேம்பால தாங்கு தூண்களிலும் இதே போன்ற விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்தால் கோவை உண்மையிலேயே ஸ்மார்ட் நகரமாகவும், மற்ற மாநகரங்களுக்கு முன்னுதாரணமாக விளங்கும் என்பதிலும் எந்த சந்தேகமும் இல்லை.

  • Bigg Boss Anshitha akbarsha Pregnant அன்ஷிதா 3 மாதம் கர்ப்பமா? பிக் பாஸ் வீட்டுக்குள் என்ன நடக்குது?!
  • Views: - 948

    0

    0