கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் ; 300க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டம்..!!
Author: Babu Lakshmanan20 October 2023, 10:58 am
மாவட்ட ஆட்சியர் அறிவித்த ஊதியத்தை வழங்க வலியுறுத்தி கோவை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களில் 7,500 ஒப்பந்த பணியாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த ஒப்பந்த பணியாளர்கள் அனைவருக்கும் 2023 ஆம் ஆண்டு ஒரு கோடியே 721 ரூபாய் சம்பளம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது, 2023 24 ஆம் ஆண்டுக்கான மாவட்ட ஆட்சியர் அறிவிக்கின்ற சம்பளத்தை இதுவரை தரவில்லை என்று கூறப்படுகிறது.
ஒப்பந்த பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், டிரைவர், கிளீனர்கள் என யாருக்கும் எந்தவிதமான சம்பளமும் நீண்ட நாட்களாக நிர்ணயம் செய்யவில்லை என்றும், உடனடியாக மாவட்ட ஆட்சியர் அறிவித்த சம்பளத்தை நிர்ணயம் செய்து வழங்கக்கோரி கோவை மாவட்ட தூய்மை பணியாளர் உரிமை மீட்பு கூட்டு இயக்கம் சார்பாக கோவை வஉசி மைதானத்தில் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த காத்திருப்பு போராட்டத்தில் 150க்கும் மேற்பட்ட ஆண்கள், 100க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் இந்த காத்திருப்பு போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள். இந்தப் போராட்டத்திற்கு காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
மாவட்ட ஆட்சியரின் அறிவுரைப்படி வழங்கக்கூடிய சம்பளத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று தங்களது பிரதான கோரிக்கையாக கண்டன கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.