கம்மி காசு தான்… தம்பதிக்கு ஆசையை தூண்டி பணம் பறிக்க முயற்சி ; பெண் உள்பட 2 பேர் கைது..!!

Author: Babu Lakshmanan
30 June 2023, 11:26 am

கோவை ; குறைந்த விலைக்கு தங்கம் தருவதாகக் கூறி தம்பதியிடம் பணம் பறிக்க முயன்ற பெண் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

கோவை குனியமுத்தூர் விநாயகர் கோயில் வீதியைச் சேர்ந்தவர் சுதாகர். இவருடைய மனைவி ரஞ்சனி. இவர்கள் அதே பகுதியில் குளிர்பானங்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார்கள். கர்நாடகா மாநிலம் மைசூரை சேர்ந்தவர்கள் பீம், குடியா. அண்ணன் தங்கையான இவர்கள் இருவரும் கோவையில் நடைபாதைகளில் வசித்து துணி வியாபாரம் செய்து வந்தனர். இவர்கள் இரண்டு பேரும் சுதாகர், ரஞ்சனியிடம் கடைக்கு தினமும் பழ ஜூஸ் குடிக்க வருவது வழக்கம்.

இவர்கள் தங்கள் ஊரில் பூமிக்கு அடியில் புதையல் இருப்பதாகவும், அதனை குறைந்த விலைக்கு விற்பதாகவும் அவரிடம் கூறி உள்ளனர். மேலும், தங்களிடம் குறைந்த விலையில் தங்கம் உள்ளதாகவும், ரூபாய் 25 ஆயிரம் கொடுத்து வாங்கி கொள்ளலாம் என்றும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.

குறைந்த விலைக்கு தங்கம் கிடைப்பதால் இதை உண்மை என்று நம்பிய சுதாகர், ரஞ்சனி ஆகியோர், ரூபாய் 25 ஆயிரம் பணத்தை எடுத்துக் கொண்டு ஒப்பணக்கார வீதியில் உள்ள ஒரு கோவிலுக்கு அருகே வருமாறு பீம், குடியா அழைத்துள்ளனர். இதை நம்பி சுதாகர், ரஞ்சனி தம்பதியினர் பணத்துடன் அங்கு சென்றனர். அப்பொழுது அங்கே பீம், குடியா வந்து அவர்களிடம் பணம் எங்கே என்று கேட்டனர். அதற்கு அவர்கள் ஒரு பையில் உள்ளது என்று கூறி பணப் பையை காட்டினார்.

இதை அடுத்து தங்கத்தை கொண்டு வருவதாக கூறி அவர்கள் திடீரென ரஞ்சனி கையில் வைத்து இருந்த பணப் பையை லாபகமாக பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றனர். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ரஞ்சனி சத்தம் போட்டதால் அக்கம், பக்கத்தினர் உதவியுடன் அவர்கள் இரண்டு பேரையும் பிடித்து தர்ம அடி கொடுத்து கடைவீதி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பீம், குடியா மீது வழக்குப் பதிவு செய்தனர். இதைதொடர்ந்து அவர்கள் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்.

  • Ilaiyaraaja music concert updates அடுத்தடுத்து இசை நிகழ்ச்சி ரெடி…அறிவிப்பை வெளியிட்ட இளையராஜா…ரசிகர்கள் ஆவலுடன் காத்திருப்பு..!