பெண் மீது ஆசிட் வீசியதன் எதிரொலி.. நீதிமன்ற நுழைவு வாயிலில் போலீசார் தீவிர சோதனை : கோவையில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
24 March 2023, 11:48 am

நீதிமன்ற வளாகத்தில் பெண் மீது ஆசிட் வீசிய சம்பவத்தின் எதிரொலியாக நீதிமன்ற நுழைவாயில்களில் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் நேற்று குடும்ப பிரச்சினை காரணமாக சிவா என்ற நபர் அவரது மனைவி கவிதாவின் மீது ஆசிட் வீசிய சம்பவம் பெறும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் வழக்கறிஞர்கள், நீதிமன்றத்தில் பணியாற்றும் அலுவலர்கள், பணியாளர்கள் பலரும் காவல்துறையினர் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றத்திற்கு வரும் அனைவரையும் சோதனை செய்த பிறகே நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

நேற்று நீதிமன்ற வளாகத்தில் ஆய்வு மேற்கொண்ட கோவை மாநகர துணை காவல் ஆணையர் சந்தீஸிடமும் இது குறித்து தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின் பேரில் இன்று கோவை நீதிமன்ற வளாகத்தின் மூன்று நுழைவாயில்களிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள், காவலர்களை தவிர்த்து அங்கு வரும் பொதுமக்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்பே நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

பொதுமக்களின் உடமைகள் அனைத்தும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. அதேசமயம் வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்களை, காவலர்களை தவிர்த்து வரும் அனைவரும் ஒரு நுழைவாயிலின் வழியாக மட்டுமே உள்ளே சென்று வர அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும், இந்த பாதுகாப்பு பணிகளை கோவை மாநகரத் துணை காவல் ஆணையாளர் சந்தீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நேற்று நடந்த சம்பவம் குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி