தமிழக அரசின் சொத்து வரி உயர்வுக்கு எதிர்ப்பு… 200க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்து போராட்டம்
Author: Babu Lakshmanan11 மே 2022, 1:12 மணி
கோவை: கோவை மாநகராட்சியில் சொத்து உயர்வை கண்டித்து மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடத்தினர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் சொத்து வரி உயர்த்துவதற்கான அறிவிப்பை தமிழக அரசு கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்தது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய சூழலில் சொத்து வரி உயர்வு தொடர்பாக பொதுமக்கள் இம்மாதம் 13-ஆம் தேதி வரை கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது
இந்த சூழலில், தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து இன்று கோவை மாநகராட்சி, நகராட்சி பேரூராட்சி, அனைத்துப் பகுதிகளிலும் சொத்து வரியை உயர்த்த கூடாது என மனு கொடுக்கும் இயக்கத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிறது.
இதன் ஒரு பகுதியாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமைக் குழு உறுப்பினர் பத்மநாபன் தலைமையிலான மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 200க்கும் மேற்பட்டோர் இன்று மாநகராட்சி அலுவலகம் வந்தனர்.
தொடர்ந்து மாநகராட்சி வருவாய்த்துறை உதவி ஆணையர் செந்தில்குமார் ரத்தினத்திடம் தங்களது மனுக்களை ஒவ்வொருவராக அளித்தனர்.
இதுகுறித்து மாமன்ற உறுப்பினர் ராமமூர்த்தி கூறியதாவது:- கடந்த 11ம் தேதி நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் சொத்துவரி உயர்வை 15 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தலாம் என்று மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. தேர்தல் முடிந்து இரண்டு மாதங்களே ஆன சூழலில், கொரோனாவால் மக்கள் பாதிக்கப்பட்ட சூழலில், 6 ஆண்டுகள் உள்ளாட்சி தேர்தல் நடக்காமல் இருந்த இந்த சூழலில், உடனடியாக சொத்து வரி உயர்வு தேவையில்லை என்பதே எங்களது கருத்து.
தவிர்க்க முடியாத காரணத்தால் வரி உயர்வு ஏற்படுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டால், 15 சதவீதத்திற்கு உள்ளாக உயர்த்த வேண்டும் என்று தெரிவித்து இருந்தோம். மத்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிடக் கூடாது. ஆனால் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது. சொத்துவரி உயர்த்தினால் தான் மத்திய அரசின் நிதி பெற முடியும் என்று சர்வாதிகரப்போக்குடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது உள்ளாட்சி மன்றத்தின் உரிமை. இந்த அளவு வரியை உயர்த்தினால் மக்கள் தாங்கமாட்டார்கள். எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு அளித்துள்ளோம். நடைபெற உள்ள நிதிக் குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு மக்களுக்கு சாதகமாக இருக்கும் என்று நம்புகிறோம்,
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த மனு அளிக்கும் போராட்டத்தில் கோவை மாநகராட்சி வார்டு உறுப்பினர்கள் பூபதி, கண்ணகி, சுமதி உட்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
0
0