அமைச்சருக்கு நெருக்கமான தொழிலதிபர் வீட்டில் ஐடி ரெய்டு… கட்டுமான நிறுவன வரி ஏய்ப்பு புகார் ; கோவையில் பரபரப்பு..!!

Author: Babu Lakshmanan
14 September 2023, 4:21 pm

கோவையில் தக்ஷ ப்ராபர்டீஸ் அண்ட் டெவலப்பர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை மருதமலை சாலையில் நவாவூர் பிரிவு பகுதியில் ஸ்ரீ தக்‌ஷா பிராப்பர்டீ அண்ட் டெவலப்பர்ஸ் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதன் இயக்குனர்களில் ஒருவராக மோகன் இருந்து வருகிறார். தக்‌ஷா நிறுவனம் கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் வீட்டு மனைகளை வாங்கி அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து வருகிறது.

இந்நிலையில், கோவை வடவள்ளி அருகே குருசாமி நகரில் இருக்கக்கூடிய இந்த நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவரான மோகன் என்பவரது வீட்டில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

சோதனையை ஒட்டி, மோகன் வீட்டில் பாதுகாப்பிற்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். கட்டுமான நிறுவனத்தில் வந்த வருமானத்திற்கு உரிய வருமான வரியை செலுத்தாதால் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனால், வடவள்ளி பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

மோகன், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு நெருக்கமானவர் என கூறப்படும் நிலையில், இந்த சோதனை அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதே போல, தக்‌ஷா நிர்வாக இயக்குனர்கள் ராமநாரயணன், மற்றும் அருள் ஆண்டனி ஆகியோர் இல்லங்களிலும் சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

  • Tamil cinema re-release movies ரஜினி,விஜயை தொடர்ந்து ரீ-ரிலீஸில் குதிக்கும் பிரபல நடிகர்…அட இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..!