திமுக கவுன்சிலர்களிடையே மோதல்… பலிகடாவான கூலித் தொழிலாளி ; கோவை மாநகர காவல் ஆணையரிடம் குடும்பத்தினர் மனு..!!
Author: Babu Lakshmanan24 June 2023, 5:53 pm
கோவையில் இரு கவுன்சிலர்களுக்கு இடையிலான பிரச்னையில் பிளம்பிங் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி மீது பொய்வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளதாக அவரது உறவினர்கள் மாநகர காவல் ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.
கோவை மாநகராட்சி 77வது வார்டு செல்வபுரம் பகுதியில் கவுன்சிலராக இருப்பவர் ராஜ லட்சுமி. இவரது பகுதியில் நடைபெற்று வரும் உப்பு தண்ணீர் விநியோகிக்கும் தொடர்பான பிளம்பிங் பணிகளை செய்து வருபவர் அபீப் ரகுமான். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு அந்த பகுதியில் ரோந்து சென்ற போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அபீப் ரகுமான் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரது உறவினர்கள் மற்றும் 77வது வார்டு கவுன்சலர் ராஜலட்சுமி ஆகியோர் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்துள்ளனர். அவர் வழங்கிய மனுவில், உப்பு தண்ணீர் சீரமைக்கும் பணிக்காக எனது கணவரின் உதவியுடன் வேலை செய்து கொண்டிருந்தோம். அந்த வழியாக வந்த டி2 காவல் நிலைய காவலர் சாலமோன் என்ன வேலை செய்கிறீர்கள். இது யாருடைய வார்டு என்று கேட்டு, அங்கு வேலை செய்த அபிப் ரகுமான் என்பவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தொடர்ந்து அவர் மீது பொய் வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளதாகவும், தாங்கள் இதை விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொள்வதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அபீப் ரகுமானின் உறவினர்கள் கூறுகையில், “செல்வபுரம் பகுதியில் அருகருகே உள்ள ஒரே கட்சியை சேர்ந்த கவுன்சிலர்களுக்கு உள்ள பிரச்னையில் காவல்துறையினர் சரிவர விசாரிக்காமல் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்தனர். கோவையில் ஒரே கட்சியை சேர்ந்த உறுப்பினர்களுக்கு உள்ள பிரச்னையில் தொழிலாளி கைது செய்யப்பட்டுள்ள இந்த சம்பவம் பெரும் விமர்சனமாகி வருவது குறிப்பிடத்தக்கது.