கோவையில் திமுக பெண் நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறை சோதனை… தமிழகத்தில் 80க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு…!!
Author: Babu Lakshmanan3 November 2023, 8:56 am
கோவையில் திமுக இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநிலத் துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் இல்லத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான வீடு, அலுவலகம் மற்றும் கல்லூரிகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, திருவண்ணாமலையில் உள்ள அவருக்கு சொந்தமான இடங்கள், பொறியியல் கல்லூரிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக கோவையில் ராமநாதபுரம்- நஞ்சுண்டாபுரம் சாலையில் அமைந்துள்ள திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில துணை செயலாளர் மீனா ஜெயக்குமார் இல்லத்திலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மூன்று கார்களில் வந்துள்ள அதிகாரிகள் தற்போது சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், அங்கு காவல்துறையினரும் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மீனா ஜெயக்குமார் அமைச்சர் எ.வ.வேலுவின் உறவினர் எனப்படும் நிலையில், இவரது கணவர் ஜெயக்குமார் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.