குடிபோதையில் ஏற்பட்ட தகராறு.. பைக்கை வழிமறித்து தென்னை மட்டையால் அடித்து ஒருவர் கொலை ; தப்பியோடிய கும்பல்!!

Author: Babu Lakshmanan
20 December 2022, 11:35 am

கோவை ; கோவையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பைக்கில் சென்றவரை மர்ம கும்பல் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை செட்டி பாளையம் அருகே உள்ள மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் பிரபாக ரன்(வயது39). இவர் அந்த பகுதியில் உள்ள கம்பெனியில் லேத் ஒர்க் ஷாப்பில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகள்கள் உள்ளனர்.

சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களான அதே பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன், ஞானபிரகாசம் ஆகியோருடன் அங்குள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு மது குடிக்க சென்றார். பின்னர் 3 பேரும் அங்கிருந்து வெளியில் வந்தனர். அப்போது அங்கு நின்றிருந்த 5 பேர் இவர்களிடம் தகராறில் ஈடுபட்டனர்.

பின்னர், பிரபாகரன் தனது நண்பர்களுடன் அங்கிருந்து மொபட்டில் சென்றார். இந்த நிலையில் இவர்களை அந்த 5 பேர் கும்பல் காரில் பின் தொடர்ந்து வந்ததுடன், மீண்டும் தகராறில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த அந்த 5 பேர் கும்பல் வண்டியில் இருந்து பிரபாகரனை கீழே தள்ளி தென்னை மட்டையால் தாக்கினர். பின்னர் அங்கு இருந்த கல்லால் அவரது தலையில் தாக்கி விட்டு தப்பியோடி விட்டனர்.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய அவரை அவரது நண்பர்கள் மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு பிரபாகரனை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து செட்டிபாளையம் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து 5 பேர் கொண்ட கும்பலை தேடி வருகிறார்கள்.

  • tamannaah dialogue in odela 2 trailer trolled by netizens பூமாதா, கோமாதா… படத்தில் பேசிய வசனத்தால் ட்ரோலுக்குள்ளாகும் தமன்னா…