அரசு வேலை வாங்கித் தருவதாக பணத்தை கறந்த போலி தாசில்தார்… ரூ.16 லட்சம் அபேஸ் செய்த டிரைவர் கைது!!

Author: Babu Lakshmanan
27 May 2024, 6:10 pm

பெரியநாயக்கன்பாளையத்தில் தாசில்தார் என கூறி அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சத்து 25 ஆயிரம் மோசடி செய்த கார் டிரைவர் கைது செய்யப்பட்டார்.

கோவை பெரியநாயக்கன்பாளையம் டேங்க் ரோடு பகுதியில் வசிப்பவர் முருகேஷ் என்பவரின் மகன் 29 வயதான சக்திவேல். கடந்த 7ம் தேதி ஜேசுராஜா என்பவர் சக்திவேலுக்கு அறிமுகமாகி, மதுரையில் சிறப்பு தாசில்தாராக உள்ளதாகவும், அரசு துறையில் வாங்கி தருவாதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதன்பேரில் சக்திவேலின் மனைவிக்கு கோவை மாநகராட்சியில் பில் கலெக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி முன்பணம் ரூ.25 ஆயிரத்தை ஜேசுராஜா வாங்கியுள்ளார்.

மேலும் படிக்க: முட்புதரில் கேட்ட அழுகுரல்.. குப்பையில் கிடந்த பச்சிளம் ஆண் குழந்தை ; போலீசார் விசாரணை!!

தொடர்ந்து இன்று மீதி பணம் ரூ.2 லட்சத்தை பெற சக்திவேல் வீட்டிற்கு வந்துள்ளார். ஜேசுராஜாவின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த சக்திவேல், அடையாள அட்டையை கேட்டுள்ளார். உடனே சுதரித்துக்கொண்ட ஜேசுராஜா சக்திவேலுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு தப்பியுள்ளார். இதுகுறித்து சக்திவேல் பெரியநாயக்கன்பாளையம் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் சிவகுமார், சிறப்பு பிரிவு போலீஸ் கங்காதரன் விஜயகுமார் உள்ளிட்ட போலீசார் சாந்திமேடு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது, காரில் வந்த ஜேசுராஜாவை பிடித்தனர்.

தொடர்ந்து ஜேசுராஜாவை காவல்நிலையத்தில் வைத்து விசாரணை செய்தபோது, விருதுநகர் மாவட்டம், நல்லமங்களம், மணியன் கோவில் வீதியை சேர்ந்த கருத்தபாண்டியன் என்பவரின் மகன் ஜேசுராஜா என்பதும், தற்போது சாந்திமேடு, லட்சுமிபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருவதாகவும், மதுரையில் தாசில்தாராக வேலை செய்வதாக பொய்யான தகவலை கூறி சக்திவேலுவிடம் ரூபாய் 25 ஆயிரத்தை ஏமாற்றியதும் தெரியவந்தது.

மேலும், இதே போல் 2023 ஆம் ஆண்டு ஜேசுராஜா வீட்டு அருகில் உள்ள சேகர் என்பவரின் மகன் 31 வயதான முகிலன் என்பவரிடம் தாசில்தார் அலுவலகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 10 லட்சம் மற்றும் அதே பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவரிடம் கலெக்டர் அலுவலகத்தில் ஒ.ஏ வேலை வாங்கி தருவதாககூறி ரூபாய் 6 லட்சமும் மொத்தம் ரூபாய் 16 லட்சத்து 25 ஆயிரம் ஏமாற்றியுள்ளது தெரியவந்தது. அதனையடுத்து ஜேசுராஜா மீது வழக்குபதிவு செய்த போலீசார் கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறும்போது, ஜேசுராஜா மேலும் மற்றவர்களை ஏமாற்றியுள்ளாரா என தெரியவில்லை. தொடர்ந்து நீதிமன்றத்தில் காவலில் எடுத்து விசாரணை செய்ய வேண்டும் என்று கூறினர்.

  • tvk leader vijay statement on waqf amendment bill இதுதான் பாஜகவின் பெரும்பான்மைவாத ஆதிக்க அரசியல்- அறிக்கையால் அலறவிட்ட தவெக தலைவர் விஜய்…