கோவை அரசு கலை கல்லூரியில் வேட்டி, சட்டை அணியத் தடை..? நாளை போராட்டம் நடத்த மாணவர்கள் முடிவு என தகவல்..!!
Author: Babu Lakshmanan8 June 2022, 6:40 pm
கோவை அரசு கலை கல்லூரியின் ஆண்டு விழாவில், தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி அணிய தடை விதிக்கப்பட்டதாக வெளியான தகவலால் மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
கோவை அரசுக் கலை கல்லூரியில் நடத்தப்படும் ஆண்டு விழாவையொட்டி, மாணவர்களின் வாட்ஸ் அப் எண்ணிற்கு ஆசிரியர் ஒருவர், உடை கட்டுப்பாடு உள்பட பல்வேறு கட்டுப்பாட்டுகளுடன் கூடிய சுற்றறிக்கையை அனுப்பியதாக சொல்லப்படுகிறது.
அந்த சுற்றறிக்கையில், கோவை அரசு கலை கல்லூரியில் கல்லூரி மாணவர்கள் வேட்டி, சட்டை அணிந்து வர தடை விதிக்கப்படுவதாக கல்லூரி சார்பில் கட்டுப்பாட்டு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விழாவுக்கு வரும் மாணவர்கள் வெள்ளை சட்டை மற்றும் கருப்பு நிற பேண்ட் அணிந்து வரலாம் என்றும், மாணவர்கள் உணவுகள் எடுத்துக் கொண்டு வர வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
கல்லூரி நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக இந்த அறிவிப்பை வெளியிடாத போதும், ஆசிரியர் ஒருவர் கல்லூரி நிர்வாகத்தின் முடிவு எனக் கூறி, ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருப்பது மாணவர்களிடையே அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
எனவே, ஒருவேளை இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்தை கண்டித்து நாளை போராட்டம் நடத்த போவதாக தெரிவித்துள்ளனர்.