குட்டித் தீவு போல மாறும் கோவை அரசு மருத்துவமனை : ஆம்புலன்ஸ் நுழைய முடியாததால் நோயாளிகள் அவதி!!!
Author: Udayachandran RadhaKrishnan3 May 2023, 9:18 am
மழை வரும் போதெல்லாம் தீவு போல் மாறும் கோவை அரசு மருத்துவமனை- நிரந்தர தீர்வு காண நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்நோயாளிகள் வெளி நோயாளிகள் பொதுமக்கள் வந்த செல்கின்றனர்.
அரசு மருத்துவமனைக்கு முன்புறம் இரண்டு நுழைவாயில்கள் உள்ளன. இதில் ஒரு நுழைவாயில் வழியாக ஆம்புலன்ஸ் உள்ளே சென்று மற்றொரு வழியாக வெளிவரும். மேலும் அதிகப்படியான பொதுமக்களும் இந்த நுழைவாயிலை பயன்படுத்தி வருகின்றனர்.
இதன் அருகே தற்போது கூடுதல் கட்டிடம் கட்டப்பட்டு வரும் நிலையில் எப்போது மழை பெய்தாலும் இந்த நுழைவாயில் உள்ளே மழைநீர் தேங்கி யாரும் பயன்படுத்த முடியாததை போன்று தீவு போல் மாறிவிடுகிறது.
இதனால் ஆம்புலன்ஸ்கள் உள்ளே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டு மற்றொரு வழியாக மட்டுமே உள்ளே சென்று வெளியில் வருகிறது. அதே சமயம் அந்த ஒரு நுழைவாயிலையே பொதுமக்களும் பயன்படுத்துவதால் அங்கு நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் பொதுமக்கள், நோயாளிகள் பெரும் சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது. தேங்கிய மழை நீரை மருத்துவமனை நிர்வாகமோ அல்லது மாநகராட்சி நிர்வாகமோ இயந்திரங்களை கொண்டு அகற்றிய பிறகுதான் இந்த வழியை மீண்டும் பயன்படுத்த முடிகிறது.
எனவே இந்த நுழைவாயிலின் உள்ளே மழைநீர் தேங்காத வண்ணம் நிரந்தர தீர்வு காண வேண்டும் என நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.