‘எல்லாமே பேட்ச் வொர்க்கா..?’ ஆணி அடித்தால் இடிந்து விழும் அரசு குடியிருப்பு ; மாவீரன் படம் பாணியில் நடந்த சம்பவம்…..!!
Author: Babu Lakshmanan17 October 2023, 1:11 pm
கோவையில் குடிசை மாற்று வாரிய குடியிருப்பின் சுவர் இடிந்து விழுந்து பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தமிழக அரசு மூலமாக நிர்வகிக்கப்படுகின்ற பொதுத் துறை நிறுவனமாகும். இதன்மூலம், குடிசை பகுதிகளை மேம்படுத்தி, அதற்கு மாற்றாக வீடு கட்டி தரப்படுகிறது. இந்த குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு இல்லாதவர்களுக்கு வீடு என்கிற அடிப்படையில் தமிழகம் முழுவதும் உள்ள நகரங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் கோவை செல்வபுரத்தில் 500க்கும் மேற்பட்டவர்களுக்கு கொடுக்கும் விதமாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது. கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் வீடுகள் இல்லாதவர்களுக்கு சலுகை அடிப்படையில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் கொடுக்கப்பட்டது.
பல்வேறு அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்பு, தற்போது இடிந்து விழுவதற்கு துவங்கியுள்ளது. குறிப்பாக, உதயகுமார் தங்க ஜோதி தம்பதியினர், கவினேஷ் குமார், ஸ்ரீஹரன் என்ற குழந்தைகளுடன் குடும்பத்துடன் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இந்த நிலையில் அங்கு வெளிப்புறத்தில் உள்ள மாடியின் சுவர் தங்க ஜோதியின் கையின் மீது இடிந்து விழுந்ததால் பெரும் அசம்பாவிதத்திலிருந்து தப்பித்தார். இதனால் அவர் பலத்த காயம் அடைந்துள்ளார்.
இந்த குடியிருப்பு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொடுக்கப்பட்டு 10 மாதங்களே ஆன நிலையில், மாவீரன் படம் பாணியில் இடிந்து விழும் நிலையில் உள்ளதாக அங்கு வசிக்கும் குடியிருப்பு வாசிகள் தெரிவித்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பு சுவற்றில் ஆணி அடித்தாலே இடிந்து விழும் சூழ்நிலை உள்ளதால் அங்கு வசிக்கும் குடியிருப்பு வாசிகள் அச்சத்துடன் வாழ்ந்து வருகின்றனர்.