கரைபுரண்டோடும் கோவை நொய்யல் ஆறு… அடித்துச்செல்லப்பட்ட தரைப்பாலம்… போக்குவரத்து துண்டிப்பு

Author: Babu Lakshmanan
16 July 2022, 11:39 am

கோவையில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக, நொய்யல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையால், கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது‌. மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நொய்யல் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும், தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருவதால், வெள்ள நீர் கரைபுரண்டு ஓடி வருகிறது. இதன் காரணமாக சித்திரை சாவடி அணை, சுண்ணாம்பு காளவாய் தடுப்பணை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள நீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

இந்நிலையில், வெள்ளலூர் – சிங்காநல்லூர் சாலையில் இருந்த தரைமட்ட பாலம் மழைக்காலங்களில் வெள்ளத்தில் மூழ்குவது வழக்கம். இதனால், போக்குவரத்து தடைபட்டு வந்தது. இதையடுத்து, அச்சாலையில் நொய்யல் ஆற்றின் மீது உயர் மட்ட பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தரைமட்ட பாலம் இடிக்கப்பட்டு, வாகனங்கள் செல்ல புதிதாக தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது.

இதனிடையே, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தொடர் மழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், தரைப்பாலம் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. இதனால், வாகன போக்குவதரத்திற்கு தடை விதிக்கப்பட்டது.
வாகன ஓட்டிகள் 8 கிலோ மீட்டர் சுற்றி மாநகர பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில் தொடர்ந்து நொய்யல் ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் காரணமாக, வெள்ள நீர் கரை புரண்டு ஓடி வருகிறது.

இதில் சிங்காநல்லூர் – வெள்ளலூர் சாலையில் அமைக்கப்பட்டு இருந்த தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. இதன் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

மாற்றுப் பாதையான ஓண்டிபுதூர்- பட்டணம் சாலையில் உயர்மட்ட பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருவதால், அந்த சாலையிலும் வெள்ளலூர் பகுதி மக்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், போத்தனூர் சாலையும் சேதமடைந்து இருப்பதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். விரைந்து உயர்மட்ட பால கட்டுமான பணிகளை முடிக்க வேண்டும் என பொதுமக்கள் தகவல் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Karthi accident on Sardar 2 set படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!