ஒரு மணிநேர மழைக்கே மிதக்கும் கோவை… தீர்வு கிடைப்பது எப்போது..? கண்ணீர் விடும் மக்கள்..!!

Author: Babu Lakshmanan
29 August 2022, 7:23 pm

கோவையில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் கனமழை பெய்து வருகிறது. அதுமட்டுமில்லாமல், இன்னும் 5 நாட்களுக்கு கனமழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பால வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இந்த கனமழையும் பொதுமக்களை பெரிதும் வாட்டி வதைத்து வருகிறது. சாலைகள் சேறும், சகதியும் காணப்படுவதுடன், சாலைகளில் தண்ணீர் குளம் போல தேங்கி நிற்கின்றன.

குறிப்பாக, நேற்று முன்தினம் ஒரு மணிநேரம் பெய்த மழைக்கே, உப்பிலி பாளையம் மேம்பாலம் உள்பட கோவை மாநகரின் முக்கிய மேம்பாலங்கள் முழுவதும் வெள்ளத்தில் மிதந்தன. இதனால், பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். கோவை தலைமை அரசு மருத்துவமனைக்கு செல்வதிலும் நோயாளிகளுக்கு சிரமம் ஏற்பட்டது.

கடந்த இரு தினங்களாக இரவு நேரங்களில் மழை பெய்ததால் பொதுமக்களுக்கு அவ்வளாக பாதிப்பு இல்லாமல் இருந்தாலும், இன்று மாலை நேரத்தில் பெய்த கனமழையால், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பணிக்கு செல்வோர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதித்தனர்.

அவினாசி சாலை, லங்கா கார்னர், கிக்கானிக் பள்ளி சுரங்க பாதைகள் நீரில் மூழ்கின. இதனால் அங்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.மேலும் இரும்பு பேரிகார்டுகள் போடப்பட்டது. இதனால் சுரங்கு பாதையில் செல்லும் வாகனங்களும் மேம்பாலத்திற்கு திருப்பி விடப்பட்டதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அவினாசி சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணி வகுத்து நின்றது.

இதே போல், லங்கா கார்னர் சுரங்க பாதையில் தண்ணீர் சூழ்ந்ததால் திருச்சி சாலைக்குச் செல்லும் வாகனங்களும் செல்லாததால் பள்ளி முடிந்து பேருந்து காத்திருந்த மாணவ, மாணவிகள் தண்ணீரிலேயே அடுத்த பேருந்து நிறுத்தம் வரை நடந்து சென்றனர்.

வாகன ஓட்டிகள் தங்களின் மோட்டார் வாகனங்களை இயக்க முடியாமல், ஆமை வேகத்தில் நகர்ந்து சென்றனர்.

ஆட்சி மாறினாலும், காட்சி மாறுவதில்லை என்பதைப் போல, கோவை மாநகரின் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக இருக்கும், இந்த மழைநீர் வடிகால் பிரச்சனையில், ஆட்சியாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்பதே கோவை மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது.

மழை பெய்த பிறகு மோட்டார்களை வைத்து அதனை அப்புறப்படுத்துவதை விட்டுவிட்டு, எத்தனை பெரிய மழை பெய்தாலும், பாலங்கள் மற்றும் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி நிற்காத வகையிலான கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர்.

  • prabhu deva strict practice for his dancers inn shooting spot பிரபுதேவாவால் பெண்டு கழண்டுப்போன டான்சர்கள்- இவ்வளவு ஸ்ட்ரிக்ட்டான ஆளா இவரு?