கோவையில் முடிவு பெறாத பாலங்கள்.. கடும் போக்குவரத்து நெரிசலில் பயணித்த டிஐஜி திடீரென செய்த காரியம்… வைரலாகும் வீடியோ…!!
Author: Babu Lakshmanan8 June 2022, 6:02 pm
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள ஜி.என் மில்ஸ் பகுதியில் பாலம் கட்டப்பட்டு வரும் நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை பணியில் காவலர்கள் யாரும் இல்லாத சூழலில், சாலையில் சென்று கொண்டிருந்த டி.ஐ.ஜி போக்குவரத்தை சரி செய்தார்.
கோவை மேட்டுப்பாளையம் சாலையில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ளதால் கடந்த ஆட்சியில் பாலம் கட்டும் பணி துவங்கப்பட்டது. தொடர்ந்து கவுண்டம்பாளையம் பகுதியில் பாலம் கட்டும் பணி நிறைவடைந்த நிலையில் திறக்கப்படவில்லை. அதே சமயத்தில் ஜி.என்.மில்ஸ் பகுதியில் மேம் பாலம் கட்டப்பட்டு வருகிறது.
இந்த சூழல்களில் கோவை எருக்கம்பணி ஸ்டாப் முதல் கவுண்டம்பாளையம், ஜி.என் மில்ஸ், நரசிம்மநாயக்கன்பாளையம் மற்றும் பெரியநாயக்கன்பாளையம் வரை அதிக போக்குவரத்து நெரிசல் உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இப்படி இருக்க இன்று மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஜி.என்.மில்ஸ் பகுதியில் அதிக போக்குவரத்து நெரிசல் இருந்துள்ளது. அப்போது அவ்வழியாக பயணம் செய்த டிஐஜி முத்துசாமி சாலையில் போக்குவரத்தை சரி செய்ய காவலர்கள் ஏதும் இல்லாததால், வாகனத்தில் இருந்து இறங்கி போக்குவரத்தை சரி செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.