சட்டவிரோத செங்கல் சூளைகளுக்கு சீல் வைக்கும் பணிகள் தொடக்கம் ; முதற்கட்டமாக கோவை – பேரூர் தாலுகாவில் அதிகாரிகள் அதிரடி..
Author: Babu Lakshmanan23 June 2023, 10:58 am
கோவையில் சட்டவிரோதமாக இயங்கி வந்த செங்கல் சூளைகளுக்கு சீல் வைக்கும் பணிகள் தொடங்கியது.
கோவை மாவட்டத்தில் தடாகம் தொண்டாமுத்தூர், பெரியநாயக்கன்பாளையம், சோமையம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக செங்கல் சூளைகள் இயங்கி வருவதாக புகார்கள் எழுந்தன. இதனால், கனிம வளங்கள் அதிகமாக கொள்ளையடிக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவிற்கிணங்க சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த செங்கல் சூளைகள் அனைத்தும் மூடப்பட்டன.
இந்நிலையில் மூடப்பட்ட செங்கல் சூளைகள் அனைத்திற்கும் சீல் வைக்கும் பணிகள் நேற்று முதல் துவங்கியுள்ளது. முதல் கட்டமாக மாதம்பட்டி, தென்கரை உள்ளிட்ட பேரூர் தாலுகாவிற்கு உட்பட்ட 21 செங்கல் சூளைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. பேரூர் வட்டாட்சியர் காந்திமதி தலைமையில் பேரூர் காவல்துறையின் பாதுகாப்புடன் செங்கல் சூளைகளுக்கு சீல் வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இனிவரும் நாட்களில் அனைத்து தாலுகாவிலும் நீதிமன்றம் உத்தரவு வழங்கிய அனைத்து சட்டவிரோத செங்கல் சூளைகளுக்கும் சீல் வைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.