கோவையில் ரூ.2.50 லட்சம் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை உதவி ஆணையர் கைது : இடைத்தரகராக செயல்பட்ட ஆடிட்டரும் சிக்கினார்..!!
Author: Babu Lakshmanan23 March 2022, 8:43 pm
விவசாய நிலத்தை விற்பனை செய்ததற்காக பெறப்பட்ட தொகைக்கு வருமான வரி செலுத்தாமல் இருப்பதற்கு இரண்டரை லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கிய வருமான வரித்துறை உதவி ஆணையர் மற்றும் இடைதரகராக செயல்பட்ட ஆடிட்டர் ஆகிய இருவரை சிபிஐ கையும் களவுமாக பிடித்தனர்.
கோவை பீளமேடு பகுதியில் வசித்து வரும் பாலதண்டபானி என்பவர் தனக்கு சொந்தமான ஆலாந்துறை பகுதியில் உள்ள விவசாய நிலத்தை கடந்த 2013ம் ஆண்டு விற்பனை செய்துள்ளார். கடந்த மாதம், இவரது வீட்டில் நடைபெற்ற வருமான வரி சோதனையின் போது, விவசாய நிலம் விற்ற பணத்திற்கு வருமான வரி செலுத்தாதது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, நிலுவை வரியை செலுத்த ஆய்விற்கு சென்ற கோவை மண்டல வருமான வரித்துறை அலுவலகத்தில் பணிபுரியும் உதவி ஆணையர் டேனியல் ராஜ் கூறியுள்ளார். ஆனால், அவ்வாறு வரி செலுத்தாமல் இருப்பதற்கு தனக்கு 5 லட்சம் ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என அவர் கோரியுள்ளார். இரு தரப்பும் பேசி, இரண்டரை லட்சம் ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்ட நிலையில், இது தொடர்பாக பாலதண்டபானி, சிபிஐ அதிகாரிகளிடம் புகாரளித்தார்.
இதையடுத்து அவர்களது அறிவுறுத்தலின் பேரில் வருமான வரித்துறை அலுவலகத்திற்கு வந்த பாலதண்டபானி, ரசாயனம் தடவிய 50 ஆயிரம் ரூபாயை ரொக்கமாகவும், 2 லட்சம் ரூபாய்க்கு ஒரு காசோலையையும் டேனியலிடம் வழங்கினார். அப்போது அங்கு மறைந்திருந்த ஆய்வாளர் பாலாஜி தலைமையிலான சிபிஐ அதிகாரிகள் அவரை கையும் களவுமாக பிடித்தனர். மேலும் இருவருக்கும் இடையே இடைதரகராக செயல்பட்ட கோவையை சேர்ந்த தனியார் ஆடிட்டர் ஸ்ரீதரன் என்பவரும் கைது செய்யப்பட்டார்.
இவர் மூலமே, லஞ்சத்திற்கான பேச்சுவார்த்தை மற்றும் பணமும், காசோலையும் கைமாறியுள்ளது. விசாரணையின் போது, டேனியல் தனக்கு உடல்நலக்குறைவு இருப்பதாக சொன்னதையடுத்து, அவரை கோவை அரசு மருத்துவமனையில் மருத்துவ கண்காணிப்பிற்காக சிபிஐ சேர்த்தனர். அவருக்கு உடல்நலக்குறைவு இல்லை என்பது உறுதியானதை அடுத்து, டேனியல் ராஜ் மற்றும் ஸ்ரீதரனை கோவை சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.