தொடரும் மின்கட்டண உயர்வு… சிறு, குறு தொழில்கள் அழியும் அபாயம் ; கோவையில் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிப்பு..!!
Author: Babu Lakshmanan22 September 2023, 3:51 pm
மின் கட்டண உயர்வைக் கண்டித்து கோவையில் வரும் 25ம் தேதி கவன ஈர்ப்பு வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு தொழில் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
கோவையில் தமிழ்நாடு தொழில் அமைப்பினர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அவர்கள் பேசியதாவது :- பொருளாதாரம் மந்த நிலை, மூலப்பொருட்களின் விலை உயர்வு, திறன்மிகு பணியாளர்களின் பற்றாக்குறை போன்ற பல இன்னல்களை தொழில்துறை சந்தித்து வருகிறது. கடந்த வருடம் அதிகப்படியாக உயர்த்தப்பட்ட மின் கட்டணத்தால் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்.
இதுகுறித்து பலமுறை அரசிடம் முறையிட்டும் எந்த ஒரு தீர்வும் கிடைக்கவில்லை. வருடா வருடம் உயர்த்தப்படும் மின் கட்டணம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்களை நிரந்தரமாக முடக்கிவிடும் அபாயம் உள்ளது. மேலும், வருடா வருடம் ஒரு சதவீத மின் கட்டண உயர்வு இருத்தல் வேண்டும், 112 முதல் 150 கிலோ வாட் மின்சாரம் உபயோகிக்கும் தொழிற்சாலைகள் தனியாரிடமிருந்து நேரடியாக மின்சாரம் வாங்கும் நடைமுறைக்கு அனுமதி அளிக்க வேண்டும் உட்பட 7 கோரிக்கைகளை தீர்மானமாக நிறைவேற்றியுள்ளோம்.
இதனால் பல்வேறு தொழில்கள் பாதிப்படைந்து வருகிறது. இது குறித்து தமிழக அரசு கவனத்தை ஈர்க்கும் வகையில், வரும் 25ம் தேதி ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம். இதனால் சுமார் 1500 கோடி வருவாய் இழக்க வாய்ப்புள்ளது. மேலும், பலரின் வேலை வாய்ப்பு பாதிக்கப்படும், என தெரிவித்தனர்.