ஈஷாவில் தியானலிங்க பிரதிஷ்டையின் 24வது ஆண்டு தினம்… பல்வேறு மத மந்திரங்கள், பாடல்கள் அர்ப்பணிப்பு

Author: Babu Lakshmanan
24 June 2023, 6:57 pm

கோவை ஈஷா யோகா மையத்தில் உள்ள தியானலிங்கத்தில் 24-வது ஆண்டு பிரதிஷ்டை தினம் இன்று (ஜூன் 24) அனுசரிக்கப்பட்டது. இதில் கடந்த ஆண்டுகளைப் போலவே இந்து, பௌத்த மதங்களின் மந்திர உச்சாடனங்கள் மற்றும் கிறிஸ்தவ, இஸ்லாமிய சூஃபி பாடல்கள் இசை வடிவில் அர்ப்பணிக்கப்பட்டன.

தியானலிங்க கருவறையில் காலை 6 மணியளவில் ஈஷா பிரம்மச்சாரிகளின் ‘அம் நமசிவாய’ மந்திர உச்சாடனையுடன் பிரதிஷ்டை தின நிகழ்வு தொடங்கியது.

இதைத் தொடர்ந்து காலை 8.20 மணி முதல் ஈஷா ஆசிரமவாசிகள் சூஃபி பாடல்களை பாடி அர்ப்பணித்தனர். அதற்கடுத்து, வந்திருந்த சிறப்பு விருந்தினர்கள் தேவாரம் பாடினர். மற்றும் பெளத்த மதங்களின் மந்திர உச்சாடனங்கள் நடைபெற்றன. அதை தொடர்ந்து காலை 10.30 மணியளவில் சிதம்பரம் கோவில் தீக்ஷிதர்கள் ருத்ரம் சமகம் அர்ப்பணித்தனர்.

இதேபோல வெறும் இசைகருவிகளை கொண்டு நடத்தப்படும் நாத ஆராதனா நிகழ்வும், அதனை தொடர்ந்து குருபானி, வச்சனா, கிறிஸ்தவ பாடல்கள், இஸ்லாமிய பாடல்கள், சமஸ்கிருத உச்சாடனங்கள் போன்றவை இசை அர்ப்பணிப்புகளாக செய்யப்பட்டன.

இவற்றுடன் ஆதிசங்கரர் இயற்றிய ‘நிர்வாண ஷடாகம்’எனும் சக்தி வாய்ந்த மந்திரங்களின் உச்சாடனம் நடைபெற்றது. மேலும் மாலை 5.30 மணியளவில் ஈஷாவில் உள்ள பிரம்மசாரிகள் குரு பூஜை செய்து வழிபட்டனர்.

ஒவ்வொரு வருடமும் தியானலிங்க பிரதிஷ்டை தினத்தன்று பல்வேறு மதங்களைச் சேர்ந்த மக்கள் ஈஷாவுக்கு வந்து இந்நிகழ்வுகளில் ஆர்வத்துடன் பங்கேற்றதை போலவே இந்த வருடமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

ஈஷாவில் உள்ள தியானலிங்கமானது சுமார் 3 ஆண்டுகள் தீவிர ஆத்ம சாதனைகளுக்கு பிறகு சத்குரு அவர்களால் 1999-ம் ஆண்டு ஜூன் 24-ம் தேதி பிராண பிரதிஷ்டை செய்யப்பட்டது. 7 சக்கரங்களும் உச்ச நிலையில் சக்தியூட்டப்பட்டுள்ள இந்த லிங்கம் எந்த ஒரு மதத்தையும் சாராமல், ஒரு மனிதர் தனது உயிர்த் தன்மையை உணர்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. பாதரசத்தை கொண்டு ரச வைத்திய முறையில் உருவாக்கப்பட்டுள்ள லிங்கங்களில் இது தான் உலகிலேயே மிகப்பெரிய லிங்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 355

    0

    0