அரசுப் பணிக்கு போலி நியமன ஆணை… ரூ.77 லட்சம் சுருட்டிய சர்வேயர் கைது ; 3 பெண்கள் உள்பட 4 பேர் தலைமறைவு!!!

Author: Babu Lakshmanan
11 May 2024, 4:57 pm
Quick Share

அரசு வேலை வாங்கித் தருவதாக போலி பணி நியமன ஆணை வழங்கி 77 லட்சம் மோசடி செய்ததாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றிய சர்வேயர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் என்பவரின் மகன் கார்த்திக் (23 ). இவரது தந்தை முருகன் கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அரசு கருவூலத்தில் ஆறு வருடங்களாக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். அவர் பணிபுரியும் சமயத்தில் ஒப்பந்த அடிப்படையில் இரவு நேர காவலராக சாந்தி என்பவர் பணிபுரிந்து வந்துள்ளார்.

மேலும் படிக்க: 14ம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவில் நடைதிறப்பு… பக்தர்களுக்காக வெளியான புதிய அப்டேட்..!!!

முருகனிடம் அரசு வருவாய் துறையில் நில அளவை மற்றும் பதிவேடு பராமரிப்பு துறையில் சர்வேயர் ஆக பணிபுரிந்து வந்த கலை சங்கர் என்பவர் ஏராளமானவருக்கு அலுவலக உதவியாளர் பணி மற்றும் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட அரசு பணிகளை வாங்கிக் கொடுத்துள்ளார் என்றும் கூறியிருக்கிறார். மேலும் யாருக்காவது அரசு வேலை தேவை என்றால் அவரை சந்தித்து பணம் கொடுத்தால் வாங்கிவிடலாம் எனவும் கூறியிருக்கிறார்.

இதை தொடர்ந்து கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள டீக்கடையில் வைத்து கார்த்திக், சர்வேயர் கலை சங்கரிடம் அறிமுகமானார். தொடர்ந்து கலை சங்கர் தனது உறவினர் மகேஸ்வரி என்பவர் சென்னை தலைமைச் செயலகத்தில் பணிபுரிந்து வருவதாகவும், அவரது கணவர் கோவை அரசு வேலைவாய்ப்பு மையத்தில் பணிபுரிந்து வருவதாகவும், அதன் மூலம் உடனடியாக அரசு வேலை கிடைக்க தன்னால் ஏற்பாடு செய்ய முடியும் எனக் கூறியிருக்கிறார்.

இதை தொடர்ந்து கார்த்திக் மற்றும் அவரது உறவினர்கள் சரவணன் மற்றும் கோகுல்ராஜ் ஆகியோருக்கு அரசு வேலை வாங்கி தருவதற்காக 8 லட்சம் ரூபாய் பணத்தை கொடுக்குமாறு சாந்தி கூறியுள்ளார். தொடர்ந்து முருகனின் நண்பர் முருகையன் என்பவருக்கு தெரிந்த கிருபா, பிரதீபா, அருள் தேவி, சுகன்யா ஆகியோருக்கும் அரசு வேலை வாங்கித் தருமாறு சாந்தியிடம் கேட்டுள்ளனர்.

தொடர்ந்து எத்தனை பேர் என கேட்டுவிட்டு அவர்களைப் பற்றி விபரங்கள் மற்றும் 15 லட்சம் ரூபாய் பணத்தை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு வைத்து கொடுத்துள்ளனர். அதன் பிறகு மொத்தமாக ஆட்கள் சேர்ந்தால் மட்டுமே ஒரு குரூப்பாக வேலைவாய்ப்பை பெற முடியும் என்றும், மேலும் 12 பேர் தேவைப்படுவதாகவும் கலைச்சங்கர் கூறியிருக்கிறார்.

பின்னர் முருகன் தனக்கு தெரிந்த சசி, செல்வராஜ், சுந்தர் மற்றும் அவரது உறவினர்கள் என 12 பேர் விபரங்களை எடுத்துக்கொண்டு, மீண்டும் கலைச்சங்கரை சந்தித்துள்ளார். தொடர்ந்து, 60 லட்சம் பணத்தை கட்டை பையில் வைத்து சாந்தி மற்றும் அவர்களை சார்ந்தவர்களிடம் கொடுத்துள்ளார். அதன் பிறகு 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 நபர்களுக்கு பணியானை கிடைத்துவிட்டது என்றும் மீதமுள்ள நபர்களுக்கு பணி ஆணை விரைவில் கிடைத்து விடும் எனவும் நம்பும் படி கலை சங்கர் கூறிவந்துள்ளார்.

அதை தொடர்ந்து, இன்னும் 2 லட்சம் ரூபாய் கொடுத்தால் அனைத்து ஆணைகளும் வந்து விடும் எனக் கூறியிருக்கிறார். மீதமுள்ள 2 லட்சம் ரூபாய் பணத்தையும் முருகன் கொடுத்துள்ளார். அதன் பின்னர் அனைவருக்கும் பணியில் சேர்வதற்கான ஆணை வழங்கப்பட்டது. உடனே அவர்கள் அனைவரும் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் சென்று பணிக்கு சேர முயன்றனர். அப்போது அனைத்து ஆணைகளும் போலியானது என தெரிய வந்தது.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், கார்த்திக் மற்றும் அவரது தந்தை முருகன் உள்ளிட்டோர் சாந்தி என்கிற செல்லம்மாள், அவரது சகோதரி கனகமணி ஆகியோரை சந்தித்து சண்டை போட்டனர். இது பற்றிய தகவல் அறிந்த கலை சங்கர் அங்கு வந்தார். உடனே கலை சங்கர் மாற்று ஏற்பாடு செய்து தருவதாக கூறியிருக்கிறார். ஆனால் முருகன் கார்த்திக் மற்றும் அவருடன் இருந்தவர்கள் வேலை வாங்கி தருவதாக ஏமாற்றி விட்டீர்கள். எனவே, நாங்கள் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி கூறியிருக்கின்றனர்.

இதற்கிடையே கலைசங்கர் உள்ளிட்டவரை ஆட்களை வைத்து கடத்தியதாக முருகன் மீது கோவை போத்தனூர் போலீஸ் ஸ்டேஷனில் கலை சங்கர் புகார் அளித்தார். இதுகுறித்து போத்தனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர், பணத்தை தந்து விடுவதாக கலைச்சங்கர், சாந்தி, மகேஸ்வரி உள்ளிட்டோர் கூறியிருக்கின்றனர். ஆனாலும் அவர்கள் பணத்தை திருப்பி தராமல் இருந்துள்ளனர்.

இந்த சூழலில் முருகன் தற்கொலைக்கு முயற்சி செய்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். தொடர்ந்து, கார்த்திக் கோவை மாநகர போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு அளித்தார். புகாரின் பேரில் போலீசார் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் சர்வேயர் கலை சங்கர் ஏராளமானவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக பணம் வாங்கியிருப்பதும், பின்னர் போலி பணி நியமன ஆணையை வழங்கி இருப்பதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து, போலீசார் சர்வேயர் கலை சங்கரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அதில், ஏமாற்றிய பணத்தில் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பண்ணை வீடு வாங்கியிருப்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், போலீசார் கோவை அரசு கருவூலகத்தில் ஒப்பந்த பணியாளராக பணிபுரிந்து வந்த சாந்தி என்கிற செல்லம்மாள் மற்றும் அவரது சகோதரி கனகமணி, மணிகண்டன், பீளமேடு பகுதியில் பிரிண்டிங் பிரஸ் வைத்துள்ள மகேஸ்வரி ஆகிய நான்கு பேர் மீதும் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

Views: - 194

0

0