இளைஞர்களை குறிவைத்து கஞ்சா சாக்லேட்டுகள் விற்பனை ; கோவையில் வடமாநிலத்தவர்கள் இருவர் கைது.. கஞ்சா மிட்டாய்கள் பறிமுதல் !!
Author: Babu Lakshmanan28 March 2023, 11:34 am
கோவை : கேரள பைபாஸில் கஞ்சா சாக்லேட் விற்பனை செய்த பீகார் வாலிபர்கள் இருவரை போலீசார் கைது செய்தனர்.
கோவை மாவட்டம் சூலூர் சிந்தாமணி புதூர் அருகே உள்ள கேரளா கொச்சின் பைபாஸ் சாலையில் உள்ள பிரபல பேக்கரி ஒன்றின் அருகில் கஞ்சா நடமாட்டம் இருப்பதாக தனிப்படை போலீஸ்க்கு தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் கேரள பைபாஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்ட தனிப்படை போலீசார் சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த இரு வடமாநில நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, அவர்கள் வைத்திருந்து தோல் பையில் பச்சை நிற மிட்டாய் வடிவிலான கஞ்சா சாக்லேட்டுகள் இருந்தது போலீசாருக்கு தெரிய வந்தது. பின்னர், இருவரையும் அழைத்து வந்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்த போது, பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தில்சானத் சதா, ராஜ்குமார் என்பதும் தெரிய வந்தது.
இருவரும் பீகார் பகுதியில் இருந்து சாக்லேட்டுகளை ரயில் மூலம் கடத்தி வந்து இப்பகுதியில் உள்ள வடமாநில நபர்களுக்கும், கேரளா செல்லும் இளைஞர்களுக்கும் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து, இருவரையும் கைது செய்த காவல்துறையினர் பதுக்கி வைத்திருந்த நான்கு அரை கிலோ பச்சை நிற சாக்லேட் வடிவிலான கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர், இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.