குறைந்த விலையில் வீட்டுமனை வாங்கி தருவதாக கூறி ரூ.58 லட்சம் மோசடி ; தனியார் கட்டுமான ஊழியர்கள் மேலும் 4 பேர் கைது!!

Author: Babu Lakshmanan
26 November 2022, 11:09 am

கோவை ; கோவையில் வீட்டு மனை வாங்கி தருவதாக கூறி மூன்று பேரிடம் ரூபாய் 58 லட்சம் மோசடி செய்த தனியார் கட்டுமான ஊழியர்கள் மேலும் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:- கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் கார்த்திக் பிரபு. தனியார் கல்லூரியில் பேராசிரியர் மகேஸ்வரன், சசிகுமார் ஆகியோர் சொந்தமாக வீடு வாங்க விரும்பினர். இதற்காக அவர்கள் கோவை ராமநாதபுரம் பகுதியில் கட்டுமான நிறுவனம் நடத்தி வந்த ஜெகநாத் சிங், கலைவாணி ஆகியோரை அணுகினார்.

அவர்களிடம் காளப்பட்டி நேரு நகரில் வீட்டுமனை இருப்பதாக கூறி அழைத்துச் சென்று இடத்தை காண்பித்தனர். அந்த இடத்தை பார்த்துவிட்டு அவர்கள் தங்களுக்கு பிடித்து இருப்பதாக கூறினர். அவர்களிடம் முன் பணமாக கொடுத்து நிலத்தை பதிவு செய்து கொள்ளுமாறு கூறினார்.

இதை நம்பி கார்த்திக் பிரபு ரூபாய் 30 லட்சம், மகேஸ்வரன் ரூபாய் 13 லட்சம், சசிகுமார் 15 லட்சம் கொடுத்தனர். அதைப் பெற்றுக் கொண்டு வீட்டுமனையை பத்திரப் பதிவு செய்து தராமல் ஏமாற்றினர். இது குறித்து புகாரின் பேரில் ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெகநாதன், கலைவாணி ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.

இச்சம்பவம் தொடர்புடைய அந்த நிறுவனத்தில் பணி, புரிந்த இளவரசி, சரண்ராஜ் ரித்திகா என்ற தேவி, பிரியா என்ற சோபனா தேவி ஆகிய மேலும் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் கோவையில் மிகக் குறைந்த விலையில் வீட்டுமனைகள் விற்பனைக்கு உள்ளதாக கூறி இணையதளத்தில் அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளனர்.

அதை நம்பி தொடர்பு கொள்பவர்களிடம் பிரியா என்ற சோபனா தேவி, ரித்திகா என்ற தேவி ஆகியோர் குறைந்த விலைக்கு வீட்டுமனைகள் உள்ளதாக நம்பும் வகையில் பேசி உள்ளனர்.

அதை நம்பி வருபவர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு ஒப்பந்தம் போட்டு உள்ளனர். அதில் நில உரிமையாளர்களின் கையெழுத்தை போலியாக போட்டு கொடுத்தும் விசாரணையில் தெரிய வந்தது. மேலும் தங்களது அடையாளத்தை மறைக்க ரித்திகா தனது பெயரை தேவி என்று பிரியா தனது பெயரை சோபனா தேவி என்றும் மாற்றிக் கொண்டு செயல்பட்டதும் தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • actor ramki shared vivek memories விவேக் படத்தை பார்க்கவே மாட்டேன், பார்த்தால் அவ்வளவுதான்- மனம் நொந்த ராம்கி