கணவனை இழந்தோர், விவாகரத்தானவர்களே குறி.. வலை வீசிய வாலிபர்.. வச்சு செய்த போலீஸ்!
Author: Hariharasudhan19 December 2024, 11:13 am
சென்னையைச் சேர்ந்த பெண்ணை மேட்ரிமோனியல் தளம் வாயிலாக திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை: சென்னை பூந்தமல்லி அடுத்த கரையான் சாவடி பகுதியில் ஜெசி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஆவடி காவல் ஆணையரகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்தப் புகாரில், “நான் 2வது திருமணம் செய்து கொள்வதற்காக கிறிஸ்டியன் மேட்ரிமோனியில் பதிவு செய்திருந்தேன்.
அப்போது கோவை மாவட்டத்தைச் சேர்ந்த லெனின் மோகன் என்பவர் என்னை திருமணம் செய்து கொள்வதாக என்னிடம் ஆசை வார்த்தைகள் கூறி, செல்போன் மூலம் பழகி வந்தார். அதேநேரம், அவருக்கு பணம் தேவைப்படும் போது அடிக்கடி என்னிடம் பணமும் வாங்கி உள்ளார். இதனால் இதுவரை நான் அவருக்கு சுமார் 5 லட்சம் ரூபாய் வரை கொடுத்துள்ளேன்.
ஆனால் என்னைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வருகிறார். எனவே, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறியிருந்தார். இந்தப் புகாரின் பேரில், ஆவடி காவல் ஆணையர் சங்கர் மற்றும் கூடுதல் ஆணையர் அர்னால்ட் உத்தரவின் படி, ஆய்வாளர் பிரவீன் குமார் விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில், தலைமறைவாக இருந்த கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த லெனின் மோகன் என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தியதில்,மதுபான விடுதிக்குச் செல்லவும், பெண்களுடன் உல்லாசமாக இருக்கவும் பணம் தேவைப்பட்டதால், மேட்ரிமோனி வலைத்தளங்களில் பதிவு செய்துள்ள கணவனை இழந்தோர் மற்றும் விவாகரத்தான பெண்களிடம் பேசி, பணம் பெற்று மோசடி செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார் என தெரிய வந்துள்ளது.
இதையும் படிங்க: விஜயின் பிரைவேட் போட்டோ எப்படி வெளியே வந்தது? அண்ணாமலை கேள்வி.. பரபரக்கும் அரசியல் களம்!
அந்த வரிசையில் தான் சமீபத்தில் ஜெசியிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, பணம் பெற்று மோசடி செய்து ஏமாற்றி வந்ததும் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அவரைக் கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 2 செல்போன்களைக் கைப்பற்றியுள்ளனர். பின்னர் அவரை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.