கவுன்சிலர்களை ‘நாய்’ என திட்டிய திமுக பெண் கவுன்சிலர்.. காரமடை நகராட்சி கூட்டத்தில் சலசலப்பு…!!

Author: Babu Lakshmanan
2 August 2023, 5:06 pm

கோவை ; மேட்டுப்பாளையம் அருகே காரமடை நகராட்சி கூட்டத்தில் திமுக பெண் கவுன்சிலர் ஒருவர், சக கவுன்சிலர்களை நாய்கள் என விமர்சித்ததால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள காரமடை நகராட்சி யின் மாதாந்திர மன்ற கூட்டம் நகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. நகராட்சி தலைவர் உஷா வெங்கடேஷ் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 27 வார்டுகளை சேர்ந்த நகர் மன்ற உறுப்பினர்கள் பங்கேற்ற நிலையில், இன்று ஒரே நாளில் 60 தீர்மானங்கள் மன்ற பார்வைக்கு கொண்டு வரப்பட்டது.

குறிப்பிட்ட நேரத்தில் கூட்டம் துவங்காமல் தாமதமாக மதியம் 12 மணிக்கு மேல் கூட்டம் துவங்கியதால், அறுபதுக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் விவாதித்து நிறைவேற்ற வாய்ப்பில்லை என பெரும்பாலான கவுன்சிலர்கள் நகர்மன்ற கூட்டத்தை நாளொன்றுக்கு முப்பது தீர்மானம் என இரு நாட்கள் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஆனால், சில கவுன்சிலர்கள் இன்றே கூட்டத்தை நடத்தி முடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இது தொடர்பாக திமுகவை சேர்ந்த பெண் கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், சில நாய்கள் கூட்டத்தை நடத்த விடாமல் பிரச்சினை செய்வதாக ஒரு திமுக பெண் கவுன்சிலர் விமர்சிக்க, கடும் வாக்குவாதம் உருவாகியது.

பிற கவுன்சிலர்களை நாய் என விமர்சனம் செய்த திமுக கவுன்சிலர் மன்னிப்பு கேட்க வேண்டும் என திமுக, அதிமுக, பாஜக என அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து நகராட்சி தலைவரை முற்றுகையிட்டு முழக்கமிட்டனர். இதனால் பெரும் சலசலப்பு ஏற்பட்டதையடுத்து, எந்த தீர்மானங்களும் நிறைவேற்றப்படாமல் தேதி குறிப்பிடப்படாமல் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

திமுக கவுன்சிலர்களிடையே கோஷ்டி பூசல் ஏற்பட்டு, மக்கள் நலன் சார்ந்த தீர்மானங்கள் ஏதும் நிறைவேற்றப்படாமல், நகர் மன்ற கூட்டம் பாதியில் நிறுத்தப்பட்டது இப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

  • bussy anand shouted tvk volunteers video viral on internet Chair-அ கீழ வைடா டேய்- விஜய் மீட்டிங்கில் கொந்தளித்து கத்திய புஸ்ஸி ஆனந்த்! வைரல் வீடியோ