நொய்யல் ஆற்றில் கரைபுரண்டோடும் வெள்ளம்… தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு!!

Author: Babu Lakshmanan
10 September 2022, 11:32 am

கோவை : கோவையில் நொய்யல் ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால், தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த சில நாட்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது. கோவை மாநகர் பகுதிகளில் மிதமான மழையும், மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் மலையை ஒட்டி உள்ள பகுதிகளில் பல்வேறு இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது.

நேற்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மற்றும் நொய்யல் ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்தது. இதன் காரணமாக நொய்யல் ஆற்றுக்கு நீர்வரத்து அதிகரித்ததால், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆற்றில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடி வருகிறது.

இந்நிலையில், வெள்ளலூர் – சிங்காநல்லூர் சாலையில் உள்ள தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அச்சாலையில் நொய்யல் ஆற்றின் மீது உயர் மட்ட பாலம் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இதற்காக தரைமட்ட பாலம் இடிக்கப்பட்டு, வாகனங்கள் செல்ல புதிதாக தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது.

கடந்த இரண்டு மாதங்களில் மூன்று முறை தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், கான்கீரிட் சாலையாக மாற்றப்பட்டது. வெள்ளப்பெருக்கு காரணமாக அச்சாலையில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தரைப்பாலத்தை வாகன ஓட்டிகள் கடந்து செல்ல வேண்டாம் என காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

இதேபோல வெள்ளலூர் – நஞ்சுண்டாபுரம் சாலையில் உள்ள தரைப்பாலம் நொய்யல் ஆற்று வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. தொடர்ந்து ஆற்றில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனிடையே தரைப்பாலத்திற்கு மேலே வெள்ளம் பாய்ந்தோடும் நிலையில், வாகன ஓட்டிகள் ஆபத்தை உணராமல் பாலத்தை கடந்து செல்கின்றனர்.

அப்பகுதி மக்கள் 10 கி.மீ தூரம் சுற்றி மாநகர பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  • Perarasu Criticized Vijay about his TVK 2nd Year Event கூலிக்கு மாரடிக்கும் ஆள்.. விஜய்யை விளாசும் இயக்குநர் பேரரசு..!!